நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. 24 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்..
Villupuram: விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் திருப்புகழ் தெருவில் வசிக்கும் மனோஜ் குமார், 3 நாட்களாக கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதிகப்படியான நூடுல்ஸ் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், ஜூலை 4, 2025: அதிகப்படியான நூடுல்ஸ் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருப்புகழ் தெருவில் வசித்து வந்தவர் மனோஜ் குமார். இவருக்கு வயது 24. இவர் அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ் குமாருக்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஜூலை 3 2025 தேதியான நேற்று இரவு அதிகப்படியான நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். இதனால் கடுமையான வயிற்று வலியுடன் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
நூடுல்ஸ் சாப்பிட்டதால் பரிபோன உயிர்:
இதை எடுத்து அவரது குடும்பத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் மனோஜ் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரத பரிசோதனையின் முடிவில் அவர் அளவுக்கு அதிகமான நூடுல்ஸ் எடுத்துக்கொண்டதால் அது செரிமானம் ஆகாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த மனோஜ் குமார் அதனை பொருட்படுத்தாமல் அதிகப்படியான நூடுல்ஸ் சாப்பிட்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக வேலைக்காக சொந்த ஊரை விட்டு வந்து பணியாற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் வெளி உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் பாஸ்புட் எனப்படும் பிரைட் ரைஸ் நூடுல்ஸ் பரோட்டா போன்றவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர். தொடர்ந்து இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு, ஜீரணக் கோளாறு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள், குடல் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளுக்கு இது வழி வகுக்கிறது.
அந்த வரிசையில் மனோஜ் குமாரின் உயிரிழப்பும் இதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. துரித உணவை நாம் உட்கொள்வது நம் உடலுக்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் எனவே ஆரோக்கியமான உணவு முறையை நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.