பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு!

Pollachi Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 குற்றவாளிகளுக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் விரைவான தீர்ப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

Updated On: 

13 May 2025 17:21 PM

கோயம்புத்தூர், மே 13: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Assault Case) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து 2025 மே 13ம் தேதியான இன்று கோவை மகளிர் நீதிமன்றம் (Coimbatore Mahila Court) தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆர்.நந்தினி தேவி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் கடந்த 2016 முதல் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு எதிராக நடந்த மோசமான நிகழ்வாகும். இந்தநிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்:


தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” என குறிப்பிட்டிருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பல காரணங்களாக புகார் அளிக்க முன்வரவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பல பெண்கள் துணிச்சல் பெற்று புகார் கொடுக்க முன்வரலாம்.” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:

பொள்ளாச்சி வழக்கு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.