‘திமுக அரசின் மாயாஜால வித்தை’ – கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விஜய் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், "குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க.அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

திமுக அரசின் மாயாஜால வித்தை - கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விஜய் கண்டனம்!

விஜய்

Published: 

04 Apr 2025 15:39 PM

சென்னை, ஏப்ரல் 4: இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில், 2025 ஏப்ரல் 2ஆம் தேதி, தமிழ்நாடு (Tamil Nadu) சட்டசபையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், 1974-ல் இந்தியா இலங்கைக்கு (Srilanka) கச்சத்தீவை ஒப்படைத்தது தவறு என்பதும், அதை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இது, கச்சத்தீவை மீட்பது தொடர்பாக நான்காவது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானமாகும். தற்போது, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக சட்டசபை இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் குறித்து பேசியபோது, கடந்த காலங்களில் மத்திய அரசின் பாராமுகத்தால் மீனவர்கள் தங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளதாகவும் இதுவரை 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.   கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தில் பேசியுள்ளார். மேலும், மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, இலங்கை அரசிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடிகர் விஜய் கண்டனம்

 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், “குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க.அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும்.

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.கடந்த 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், அன்றைய ஆளும்கட்சியான திமுக தான். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.