முட்டை எங்கே? – கேள்வி எழுப்பிய மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளர் – அதிர்ச்சி சம்பவம்

அந்த மாணவன் சமையல் கூடத்திற்கு சென்று பார்த்தபோது முட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அந்த மாணவன் கேள்வி எழுப்பியபோது மாணவனை சத்துணவு பணியாளர் துடைப்பத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியையின் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

முட்டை எங்கே? - கேள்வி எழுப்பிய மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளர் - அதிர்ச்சி சம்பவம்

மாணவர் மீது தாக்குதல்

Updated On: 

04 Apr 2025 13:36 PM

திருவண்ணாமலை, ஏப்ரல் 4: திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டம் செங்குணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் முட்டை குறித்து கேட்டபோது, முட்டை இல்லை என சத்துணவு பணியாளர் பதில் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து அந்த மாணவன் சமையல் கூடத்திற்கு சென்று பார்த்தபோது முட்டைகள் (Egg) மறைத்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அந்த சிறுவன் கேள்வி எழுப்பியபோது மாணவனை சத்துணவு பணியாளர் துடைப்பத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியையின் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சத்துணவு பணியாளர் மற்றும் உதவியாளர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பது குறைந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மாணவர்களை அரசு பள்ளிக்கு அனுப்பவே தயங்கும் சூழல் ஏற்படும்.

ஆசிரியர்களின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இதே போல தஞ்சாவூரில் ஒரத்தநாடு அருகே உள்ள அரசுத் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் அங்கு படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டியதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனை அதே பள்ளியில் வேலை செய்யும் மற்றொரு ஆசிரியர் செல்போனில் வீடியோ எடுக்க அதன் பின்னரே இந்த பிரச்னை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அரசு பள்ளிகளில் மார்ச் முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் கடந்த ஏப்ரல் 1, 2025 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் சேர்க்கை ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.