போதைப் பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் உத்தரவு!
Chennai Drug Case : போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த் - கிருஷ்ணா
சென்னை, ஜூலை 03 : போதைப் பொருள் (Chenai Drug Case) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் (Actors Srikanth, Krishna) ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கொடுக்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் கோலிவுட் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சிக்கியுள்ளார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அதிமுக முன்னாள் நிர்வாகி உள்ளிட்ட சிலரை பிடித்து விசாரித்ததில், போதைப் பொருள் சப்ளை செய்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, கயானை நாட்டைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்தது.
போதைப் பொருள் வழக்கு
இதனை அடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் 2025 ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டர். இவரை தொடர்ந்து, இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் 2025 ஜூன் 26ஆம் தேதி கைதாகினார்.
இருப்பினும், கிருஷ்ணாவுக்கு பரிசோதனை செய்ததில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரது செல்போன் தரவுகள் மூலமும் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் வழக்கில் கைதான இருவருக்கும் 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த மனுவை நீதிபதி ஹெர்மிஸ் விசாரித்து வந்தார். விசாரணைக்கு ஒத்துழைப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் முறையிட்டார். மேலும், தனது மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியற்கான அறிகுறிகள் இல்லை எனவும், இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்ம் எனவும் கிருஷ்ணா தன் வாதத்தை முன்வைத்திருந்தார்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, 2025 ஜூலை 3ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கு 2025 ஜூலை 3ஆம் தேதியான இன்று மதிய நேரத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கு காவல்துறை ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால், நீதிபதி ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு வெளியானது. அதன்படி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.