Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

55 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் கிடைத்த 2 ரூபாய்.. ரூ.10,000 ஆக திருப்பி செலுத்திய பக்தர்.. சுவாரஸ்ய சம்பவம்!

Devotee Returns Rs.10,000 for 2 Rupees | ஈரோடு மாவட்டத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்னதாக கிடைத்த ரூ.2 பணத்தை, பக்தர் ஒருவர் 55 ஆண்டுகள் கழித்து ரூ.10,000 ஆக கோயில் உண்டியலில் செலுத்தியுள்ளார். கோயில் உண்டியலை எண்ணும் பணியின்போது இது கண்டறியப்பட்டுள்ளது.

55 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் கிடைத்த 2 ரூபாய்.. ரூ.10,000 ஆக திருப்பி செலுத்திய பக்தர்.. சுவாரஸ்ய சம்பவம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 06 Jul 2025 08:59 AM

ஈரோடு, ஜூலை 06 : ஈரோட்டில் (Erode) உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்னதாக கிடைத்த 2 ரூபாய்க்கு பதிலாக பக்தர் ஒருவர் ரூ.10,000 பணம் மற்றும் அதனுடன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போட்டுச் சென்றுள்ளார். கோயில் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் பணிகள் நடைபெற்ற போது இந்த சுவாரஸ்ய சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2 ரூபாய் பணத்திற்காக ரூ.10,000-த்தை உண்டியலில் போட என்ன காரணம், 55 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பக்தருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அம்மன் கோயில் தரையில் கிடந்த 2 ரூபாய்

ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த செல்லாண்டி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவருக்கு தரையில் 2 ரூபாய் கிடைத்துள்ளது. அந்த பணத்தை தொலைத்தவர் யார் என தேடியும் கிடைக்காததால், அந்த நபர் 2 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் பணத்தை தொலைத்தவரிடம் அதனை திருப்பி தர முடியாமல் போனதை நினைத்து அவர் மன வேதனை அடைந்து வந்துள்ளார்.

கோயில் உண்டியலில் கடிதத்துடன் இருந்த ரூ.10,000

இதற்கிடையே ஜூலை 04, 2025 அன்று செல்லாண்டி அம்மன் கோயிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளை கவரில் பணத்துடன் கூடிய ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தை படித்து பார்த்தபோது இந்த சுவாரஸ்ய சம்பவம் தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில், எனக்கு கோயிலின் தரையில் 2 ரூபாய் கிடைத்தது. ஆனால் அதனை யார் தொலைத்தார் என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த பணத்தை உரியவர் இடம் திருப்பி கொடுக்க முடியாததால் அதனை நானே வைத்துக்கொண்டேன். இந்த நிலையில், 55 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணத்தை ரூ.10,000 ஆக கோயிலுக்கு நான் திருப்பி செலுத்துகிறேன் என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் எழுதியது, அவர் ஆணா அல்லது பெண்ணா, அவரது முகவரி என்ன என்பது குறித்து எந்தவித தகவலும் அதில் இடம்பெறவில்லை என கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

55 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுத்து சென்ற 2 ரூபாயை, ரூ.10,000 ஆக திருப்பி செலுத்திய நபரின் நேர்மையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.