தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான முக்கிய தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. விஜய் கலந்து கொள்ளாத இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல், கட்சிக் கட்டமைப்புப் பணிகள், மாவட்ட/ஒன்றிய அளவிலான நிர்வாகிகளின் நியமனம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை, மே 16: தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கட்சி 2024 ஆகஸ்ட் மாதத்தில் கட்சிக் கொடியையும், அக்டோபர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மீட்டிங் நடைபெற்ற நிலையில் இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகன் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பணிகளுக்காக அவர் சென்றிருப்பதால் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்சியின் பொதுச் செயலாளரான ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள், “2025 மே மாதத்திற்குள் கட்சியின் கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் உள்ள சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும், கட்சி பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் 120 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாக ரீதியான செயலாளர்கள் பங்கேற்று இருந்தனர். சமீபத்தில் கோவையில் நடந்து முடிந்த பூத் கமிட்டி மாநாடு குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மக்களின் ஆதரவு எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்த தகவல்களை தலைமையிடம் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகிறது. இதன் அடிப்படையில் அறிக்கையானது தயாரிக்கப்பட்டு விஜயுடன் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது இதற்கிடையில் மே மாத இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.