Virat Kohli: ஓய்வு முடிவை ஏற்காத பிசிசிஐ.. விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலக காரணம் என்ன..?

Virat Kohli Wants To Retirement from Test: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக வெளியான செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ரன் எடுத்தல் சராசரி குறைந்திருப்பதும், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்திருப்பதும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பிசிசிஐ அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.

Virat Kohli: ஓய்வு முடிவை ஏற்காத பிசிசிஐ.. விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலக காரணம் என்ன..?

விராட் கோலி

Published: 

10 May 2025 16:41 PM

வருகின்ற 2025 ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை தந்தது. இந்தநிலையில், விராட் கோலியும் (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிசிசிஐக்கு (BCCI) கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஓய்வு முடிவு ஏன்..?

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி, கடந்த 5 ஆண்டுகளில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இதேநேரத்தில், அவரது சராசரியும் 30.77 ஆகவே உள்ளது. இந்திய அணிக்காக விராட் கோலி கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானார். அறிமுகமான அந்த ஆண்டு முதல் 2019 வரை, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 84 டெஸ்ட் போட்டிகளில் 54.97 சராசரி மற்றும் 27 சதங்களுடன் 7,202 ரன்கள் குவித்தார். 2020ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை விராட் கோலி ரன் எண்ணிக்கை தலைகீழாக மாறியது. இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி வெறும் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30.72 என்ற சராசரி மற்றும் 3 சதங்களுடன் 2,020 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லிய பிசிசிஐ:

இந்திய அணி வருகின்ற 2025 ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், விராட் கோலி ஓய்வு பெறப்போவதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கிடைத்த தகவலின்படி, கோலியின் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

2024 -25 பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு விராட் கோலி தனது டெஸ்ட் ஓய்வு பற்றி யோசித்து வருகிறார் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விராட் கோலி செயல்திறன் சிறப்பானதாக இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இதன் பிறகு, அடுத்த 8 இன்னிங்ஸ்களில் கோலி வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில், கோலி 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.