Jasprit Bumrah: யாரைப் பார்த்தும் பயப்படாதே.. பும்ராவுக்கு அட்வைஸ் கொடுத்த சச்சின்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானபோது, சச்சின் டெண்டுல்கர் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு வழங்கிய அறிவுரையை பும்ரா பகிர்ந்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, அணியின் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெற்ற வெற்றிகளைப் பற்றியும் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகும்போது சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) சொன்ன அறிவுரை என்ன என்பதை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சில ஆட்டங்களில் விளையாடவில்லை. இதனிடையே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள அவர் பந்து வீச்சில் அசத்தி வருகிறார். கடந்த மே 4, 2025 அன்று மும்பையில் காஸ்ட்ரோல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் மும்பை அணியின் வீரர்களான நமன் திர், வில் ஜாக்ஸ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பும்ரா, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அறிமுகமானதையும், தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்ததையும் பற்றி பேசினார்.
அதாவது, “நான் முதன்முதலாக மும்பை அணியின் ஜெர்சியை அணிந்தபோது எனக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதுதான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி ஐபிஎல் தொடராகும். அப்போது மும்பை அணியில் மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானேன். அப்போட்டியில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பங்களித்தேன். மயங்க் அகர்வால், விராட் கோலி மற்றும் கருண் நாயர் ஆகிய 3 பேரும் தான் என்னிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தவர்கள்.
முன்னணி வீரர்களின் பேட்டிங் என்னை கொஞ்சம் பதற்றமாக்கியது. அப்போது தான் என்னிடம் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை ஒன்றை வழங்கினார். 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் மிகவும் வித்தியாசமாக இருக்கும் அதைவிட சர்வதேச கிரிக்கெட் வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் என்னிடம் வந்து, “ எக்காரணம் கொண்டு தனிநபராக வீரர்களை பார்த்து பதற்றப்பட வேண்டாம். பெயருக்கு பந்து வீசாமல் ஒரு பேட்ஸ்மேனுக்கு வீசுவது போல இருக்க வேண்டும். அது எனக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது” என கூறினார்.
நீங்கள் ஒரு விளையாட்டில் அழுத்தத்தில் இருக்கும்போது உங்களைப் போலவே எதிரணியைச் சேர்ந்தவர்களும் அழுத்தத்தில் இருப்பார்கள் என்பதை உணர வேண்டும். இதனால் உங்களால் சாதாரணமாக விளையாட்டில் பங்களிக்க முடியும்” எனவும் பும்ரா கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சில ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஆனால் தற்போது வெகுண்டெழுந்த அணியாக உள்ளது. 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி 4 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் மும்பை உள்ளது. இதுபற்றி பேசிய பும்ரா, “தொடக்கம் மோசமாக இருந்தாலும், தற்போது அணி சிறப்பாக இருக்கிறது. நாங்கள் போட்டியை வெல்ல தனி நபரை நம்பியிருக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டத்தில் யாரோ ஒரு வீரர் தங்கள் கைகளில் அணியை பிடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார். இது நல்ல தொடக்கமாகும்” எனவும் பும்ரா கூறினார்.