IPL 2025: எல்லையில் போர் பதட்டம்.. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா..? பிசிசிஐ விளக்கம்!
Operation Sindoor: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து "ஆபரேஷன் சிந்துர்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் 2025 போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐபிஎல் 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவம் இன்று அதாவது 2025 மே 7ம் தேதி அதிகாலை 1 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இந்திய இராணுவம் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில், பல பயங்கரவாதிகள் அழிந்ததுடன், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த முகாம்களும் அழிக்கப்பட்டது. சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை பறிகொடுத்த பெண்களின் குங்குமத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில், இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்று பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பா..?
இந்திய இராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் ஒத்திவைக்கப்படுமா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரம் ஒன்று ANI இடம் அளித்த விளக்கத்தில், “ ஐபிஎல் 2025 போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது. அனைத்து ஐபிஎல் போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்திருந்தது.
பல இடையூறுகளுக்கு பிறகும் நடைபெறும் ஐபிஎல்:
🚨IPL 2025 to go on as per plan: BCCI 🚨
– There will be no change to the schedule unless instructed by the government
(ANI)#OperationSindoor #MIvsGT pic.twitter.com/yt7PSE8zPj
— Cricketism (@MidnightMusinng) May 7, 2025
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது தற்போது வரை 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 18வது சீசனும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடக்கப்பட்டது முதலே பல ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ராமநவமி, கொரோனா பரவல் என பல இடையூறுகளை சந்தித்தது. இதில், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் போட்டி நடத்த தாமதம் மற்றும் இட மாற்றம் ஆகியவை மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக, இதுநாள் வரையில் ஐபிஎல் சீசன் ஒருபோதும் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மார்ச் மாதம் நடத்தப்படவில்லை என்றாலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும், இந்தியாவில் நடத்தப்படவில்லை என்றாலும், யூஏஇ அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் என ஏதாவது ஒரு வடிவத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை அதாவது 2025 மே 8ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில், ஐபிஎல் 2025ன் 58வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தபோது, திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.