India’s Test Squad: இங்கிலாந்து அணிக்கு எதிராக புதிய கேப்டன்.. விரைவில் அறிவிக்கப்படும் இந்திய டெஸ்ட் அணி..!
India's New Test Captain: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் தேர்வு மிக முக்கியமானதாக உள்ளது. சுப்மன் கில் கேப்டன் பதவிக்கு முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. கே.எல். ராகுலையும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்திய அணி 2025 மே 16 அல்லது 17 அறிவிக்கப்படலாம்.

இந்திய கிரிக்கெட் அணி
ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதகாலம் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரத்தில், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் இந்திய டெஸ்ட் அணிக்காக இனிமேல் விளையாட மாட்டார்கள். இப்படியான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் உள்ளிட்ட விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம்.
அடுத்த கேப்டன் யார்..?
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு தேர்வாளர்கள் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் பிசிசிஐக்கு உள்ளது. அதன்படி, சுப்மன் கில் தற்போது கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னிலை இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் மதிய உணவின்போது சுப்மன் கில் இந்திய தலைமை பயிற்சியாளரை சந்திக்கவிருந்தால் என்றும், இந்தியன் பிரிமீயர் லீக் 2025 இடைநிறுத்தப்பட்டதால் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், டெஸ்ட் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி எப்போது அறிவிப்பு..?
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வருகின்ற 2025 மே 16 அல்லது மே 17ம் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அறிவிப்பை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வருகின்ற 2025 ஜூன் 6ம் தேதி டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இங்கிலாந்து புறப்பட இருக்கிறார்.
சுப்மன் கில்லுக்கு கேப்டன்ஷி உறுதியா..?
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்பது இளம் வீரர் சுப்மன் கில்லும் மிகப்பெரிய கவுரவம் ஆக கருத்தப்படும். ஏனெனில், இதற்கு முன்பு சுப்மன் கில் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது ஒருநாள் போட்டிகளிலோ ஒருபோதும் தலைமை தாங்கியது கிடையாது. கடந்த 2024ம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் 5 டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சுப்மன் கில்லின் தலைமைத்துவ குணம் தேர்வாளர்களையும், பிசிசிஐயையும் கவர்ந்ததாக கூறப்படுகிறது.
சுப்மன் கில் இந்திய அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 57 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உள்பட 1893 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில்லும் அதிகபட்ச ஸ்கோர் 128 ரன்கள் ஆகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக கணிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி:
சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி