Mohammed Shami Death Threats: முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்.. அடுத்தடுத்து வந்த மெயிலால் அதிர்ச்சி.. காவல்நிலையத்தில் புகார்..!

Uttar Pradesh Police: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ஹசீப் அளித்த புகாரின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மிரட்டலில் ரூ.1 கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும், அது வழங்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷமி தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.

Mohammed Shami Death Threats: முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்.. அடுத்தடுத்து வந்த மெயிலால் அதிர்ச்சி.. காவல்நிலையத்தில் புகார்..!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி

Published: 

05 May 2025 18:55 PM

உத்தரபிரதேசம், மே 5: உத்தரபிரதேச மாநிலம் (Uttar Pradesh) அம்ரோஹாவை சேர்ந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு (Mohammed Shami) கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலானது மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் அம்ரோஹா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்ரோஹா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார், அதன் பிறகு, அம்ரோஹா காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்தின் உத்தரவின் பேரில், அம்ரோஹா சைபர் செல்லில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது ஷமி தற்போது ஐபிஎல் 2025ல் (IPL 2025) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல்:

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரர் ஹசீப், அம்ரோஹா காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரில் முகமது ஷமிக்கு முதலில் நேற்று மாலை அதாவது 2025 மே 4 ஆம் தேதி தனக்கு முதன்முதலில் ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், இதற்குப் பிறகு, இரண்டாவது மின்னஞ்சல் இன்று அதாவது 2025 மே 5 ஆம் தேதி திங்கட்கிழமை காலை வந்ததாகவும் தெரிவித்தார். இவை அனைத்தும் முகமது ஷமியின் மின்னஞ்சலுக்கு ராஜ்புத் சிந்தார் என்ற மெயில் ஐடியிலிருந்து வந்துள்ளது. அந்த இ – மெயிலில் ” நாங்கள் உன்னை கொன்றுவிடுவோம், அரசாங்கத்தால் எங்களை எதுவும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் விளக்கம்:

முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அம்ரோஹா காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த் கூறுகையில், ”இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல் தொடர்பாக அவரது சகோதரர் ஹசீப் புகார் அளித்துள்ளார். அந்த மிரட்டல் இ-மெயிலில் ரூ. 1 கோடி அனுப்பினால் பாதுகாப்பாக இருப்பாய் என்றும், ரூ. 1 கோடி வழங்கப்படாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஷமியின் சகோதரர் ஹசீப்பின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இந்திய கிரிக்கெட் அணியின் முகமது ஷமியின் பங்கு முக்கியமானது. இதுவரை முகமது ஷமி இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 108 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 206 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல, முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.