துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? – வழிபாடு முறைகள் இதோ!

சித்திரை வளர்பிறை தசமியான வாசவி ஜெயந்தி, மே 6, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. ஆதிபராசக்தியின் அவதாரமான வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், வழிபாட்டு முறைகள், பின்னணி கதை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் இங்கு காணலாம்.

துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!

வாஸவி ஜெயந்தி

Published: 

04 May 2025 09:35 AM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திதிகளை சிறப்பிக்கவும் நாட்கள் உண்டு. அப்படியாக சித்திரை மாதம் வரும் வளர்பிறை தசமியானது வாசவி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இது அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் அவதார தினமாக கருதப்படுகிறது. ஆதிபராசக்தியில் அவதாரமாக கருதப்படும் அன்னை வாசவி இந்நாளில் அதிகளவிலான பக்தர்களால் வழிபடப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு வாசவி ஜெயந்தியானது மே 6 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன் வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம்.

பின்னணி கதை

கலியுகத்தில் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக அவதரித்த வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு இந்த நாள் ஏன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஒரு பின்னணி கதை சொல்லப்படுகிறது. அதாவது கிபி 11ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் இருக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வணிகர் குளத்தைச் சேர்ந்த குஷ்ம ஸ்ரேஸ்டி மற்றும் குஷ்மாம்பா தம்பதியினர் வசித்து வந்தனர் அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் பக்திக்கு மனமிறங்கிய அன்னை தானே மகளாக வந்து பிறந்தாள். பிறக்கும்போது அந்த குழந்தை நான்கு கரங்களோடு காட்சி கொடுத்து தான் இறைவனின் வடிவம் என்பதை உணர்த்தியது. ஆனால் அடுத்த நொடியே சாதாரண குழந்தை போல் இரண்டு கைகளுடன் மாறியது. அன்னையே தனக்கு மகளாக வந்து பிறந்ததை கண்டு அந்த தம்பதியினர் மகிழ்ச்சியடைந்தனர்.

அழகிலும் அறிவிலும் செழித்து வளர்ந்த வாசவி கன்னிகா பரமேஸ்வரியை திருமணம் செய்ய விஷ்ணுவர்தன் என்ற மன்னன் அணுகினான். ஆனால் தான் காலம் முழுக்க சிவபூஜை செய்ய விரும்புவதாக அவனது விருப்பத்தை அவள் மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட விஷ்ணுவர்தன் அன்னையுடன் சேர்த்து ஊரையும் அழித்து விடுவதாக படையெடுத்தான். இந்த ஒரு பெண்ணுக்காக ஊரே அழிய வேண்டுமா என 600க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

மீதமிருந்தவர்களிடையே தான் யார் என்பதை விளக்கிய வாசவி தன் முடிவுக்கு கட்டுப்படுபவர்கள் வானுலகம் செல்லலாம் என தெரிவித்தார். என்னை தெய்வமாக ஏற்றால் அவர்களுக்கு கலியுகம் முடியும் வரை துணை நின்று காப்பேன் எனவும் வாக்கு கொடுத்தாள். அவரது முடிவை ஏற்ற 102 பேருக்கு வாழும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கினாள்.

பின்னர் அக்னி குண்டம் இறங்கி வாசவி மறைந்த நிலையில் அவருக்குப்பின் அந்த 102 பேரும் அக்னியில் இறங்கி மறைந்தனர். அந்த கணத்தில் அன்னையை அபகரிக்க நினைத்த விஷ்ணுவர்தனின் தலை வெடித்து சிறியது. இதனைக் கண்ட அவனது மகனான ராஜ ராஜ நரேந்திரன் வாசவியின் சகோதரரான விருபாட்சனை அணுகி மன்னிப்பு கேட்டான். மேலும் வாசவிக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபடுவேன் என கூறினான்.

அன்று முதல் வணிகர் குலத்தினர் அன்னையை குலதெய்வமாக கொண்டு வழிபட தொடங்கினர். அவள் அவதரித்த சித்திரை வளர்பிறை தசமி வாசவி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கன்னிகா பரமேஸ்வரிக்கு என தனியாக சன்னதிகள் உள்ளது.

வழிபடும் முறைகள்

மற்ற விரத நாட்களைப் போல வழக்கம்போல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாசவி ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து புனித நீராடி விரதத்தை தொடங்கலாம். உடல் நிலையை பொறுத்து உணவு எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இருவேளையும் உணவு எடுக்காமல் விரதத்தை தொடரலாம். மாலையில் வீட்டில் இருக்கும் வாசவி அன்னையின் திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை வீட்டில் வாசவி அன்னையின் புகைப்படம் இல்லை என்றால் எந்த அம்மனின் புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு அவரை வாசவி அன்னையாக நினைத்துக் கொள்ளலாம்.

இந்த நாளில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து ஒரு டம்ளர் நீர் மோர், மற்றொரு டம்ளர் பானகம் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து தீப, தூபம் காண்பித்து வழிபட வேண்டும். அப்போது உங்களுக்கு என்ன பிரச்சனையோ அதனை மனதார நினைத்து அன்னையிடம் தீர்வு தரும்படி வேண்டிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை வீட்டில் திருமணமாகாத பெண்கள் கையால் செய்தால் மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. கண்ணாடி வளையல், பொட்டு, ரிப்பன், மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களை வாங்குவதற்கு வழிபாடு செய்யலாம்.

இவ்வாறு செய்வதால் வீட்டில்  இருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்று காண்பிக்கவும், திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை செய்வதால் அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் நம்பப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)