Tiruttani: திருத்தணி சித்திரை திருவிழா.. திருத்தேரோட்டம் எப்போது தெரியுமா?

திருத்தணி முருகன் கோயிலில் 2025 மே 1ம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழா, மே 8 வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா, திருத்தேர் பவனி, திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதனைப் பற்றி நாம் காணலாம்.

Tiruttani: திருத்தணி சித்திரை திருவிழா.. திருத்தேரோட்டம் எப்போது தெரியுமா?

திருத்தணி முருகன் கோயில்

Published: 

01 May 2025 14:48 PM

திருத்தணி முருகன் (Tiruttani Murugan) கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் எந்த நாளில் என்ன நிகழ்ச்சி நடைபெறும் என்பது பற்றிய முழு விபரங்களை நாம் காணலாம். தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் 2025 மே 1ம் தேதியான இன்று சித்திரை திருவிழாவுக்கான (Chithirai Festival) கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப்பெருமான் தனது சினத்தை தணித்த இடம் திருத்தணி என சொல்லப்படும் நிலையில் இங்கு ஆண்டுதோறும் அவருக்குரிய பல்வேறு விசேஷ தினங்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இன்று (மே 1) கொடியேற்றம் நடந்ததை தொடர்ந்து 2025, மே 8 ஆம் தேதி வரை நடைபெறும் விழாக் காலத்தில் தினம் தோறும் பல்வேறு பல்லக்கில் சுவாமி வீதியுலா மற்றும் திருத்தேர் பவனி ஆகியவை நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள்

அதன்படி 2025, மே 2ம் தேதி காலையில் முருகப்பெருமான் வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் உலா வருகிறார். அன்றிரவு பூத வாகனத்தில் வீதியுலா வருவார். 2025, மே 3ம் தேதி காலையில் சிம்ம வாகனத்தில் பவனி வரும் முருகப்பெருமான் இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 2025, மே4 ஆம் தேதி காலையில் பல்லக்கு வீதியுலா வரும் முருகப்பெருமான் இரவில் வெள்ளி நாக வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

2025, மே 5ம் தேதி காலை அன்ன வாகனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் முருகப்பெருமான் வீதியுலா வருவார். 2025, மே 6ஆம் தேதி காலை புலி வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 2025, மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து  2025 மே 8ம் தேதி காலையில் யாளி வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும் தொடர்ந்து தெய்வானையுடன் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயில்

முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் ஐந்தாம் படை வீடாக திகழ்வதுதான் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும். இந்தக் கோயில் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தளமாக உள்ளது. ஓராண்டின் 365 நாட்களை குறிக்கும் வகையில் இங்கு 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் சினத்தை தணித்ததால் இந்த இடம் தணிகை மலை என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 84 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.