வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றினால் இவ்வளவு பலன்களா? – முழு விபரம்!

காமாட்சி விளக்கு இந்து மதத்தில் முக்கியமான வழிபாட்டுப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதனை ஏற்றுவது குடும்ப ஒற்றுமை, செல்வ செழிப்பு, எதிர்மறை சக்தியை விரட்டுதல் போன்ற நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது. இந்த விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி, சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரித்து தீபம் ஏற்ற வேண்டும்.

வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றினால் இவ்வளவு பலன்களா? - முழு விபரம்!

காமாட்சி விளக்கு

Published: 

22 May 2025 11:37 AM

பொதுவாக தீபம் என்பது ஆன்மிகத்தின் மிக முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது. இறைவனை ஒளி வடிவில் காண நினைப்பதின் எண்ணமே தீபமேற்றுதலின் அடிப்படை தத்துவமாக உள்ளது. அதில் இருந்து வரும் பிரகாசமான ஒளி நம் வாழ்க்கையில் இருக்கும் இருளை நீக்கி ஒளி கொடுக்கும் என்பது நம்பிக்கையாகும். இதனாலேயே வீட்டின் பூஜையறை மற்றும் கோயில்களில் தீபமேற்றி வழிபடுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படியான பட்சத்தில் நம்முடைய வீட்டில் பல்வேறு விதமான விளக்குகள் பூஜை வழிபாட்டில் இருப்பதை பார்த்திருக்கலாம். அதாவது மண் அகல் விளக்குகள் தொடங்கி பித்தளை, வெள்ளி விளக்குகள் வரை அதனை சொல்லலாம். அதேசமயம் காமாட்சி விளக்கு என்பது இந்து மதத்தில் இறை வழிபாட்டில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். அத்தகைய காமாட்சி விளக்கு எப்படி ஏற்ற வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை நாம் காணலாம்.

காமாட்சி அம்மன் விளக்கின் முக்கியத்துவம்

பொதுவாக வீட்டில் காமாட்சி விளக்கு வைத்து வணங்குவது என்பது அந்த இல்லத்திற்கு அமைதியையும் ஆற்றலையும் அதிக அளவில் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் வீட்டில் உள்ள குடும்பத்தினரின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் இது முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றும் பலர் வீடுகளில் காமாட்சி விளக்கை ஒரு பொன் போல பாதுகாத்து வருகிறார்கள். இது ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் பாரம்பரிய ரீதியாகவும் பெரும் மதிப்புகளை பெற்றுள்ளது.

வீட்டில் தெய்வ சக்தியை அதிகரித்து எதிர்மறை சக்தியை விரட்டுவதில் இவை முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்த விளக்கில் தீபம் ஏற்றினால் அதிலிருந்து வரும் ஒளியானது தெய்வீக இருப்பை வீட்டில் உணர்த்தும் அடையாளமாக திகழ்கிறது. இந்த விளக்கை வைத்து வழிபடுவதால் அந்த இடம் ஒரு ஆத்மார்த்தமான மையமாக மாறுகிறது.

காமாட்சி விளக்கை ஏற்றுவது குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. மற்ற நாட்களைத் தவிர்த்து விசேஷ நாட்களில் இந்த விளக்கு கட்டாயம் ஏற்றப்படும். அன்றைய நாள் வீட்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றிணைவார்கள். இது ஆன்மீக ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான பின்னணியை உறவுக்குள் ஏற்படுத்துகிறது.

மேலும் காமாட்சி விளக்கு வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. லட்சுமியின் மறு உருவமாக கருதப்படும் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதில் தீபம் ஏற்றி வழிபடும்போது மனதில் ஒருவித அமைதி மற்றும் நாம் நினைத்தது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டாகும் என சொல்லப்படுகிறது.

விளக்கு ஏற்றும் முறை

காமாட்சி விளக்கை நன்கு சுத்தம் செய்து அதில் பசு நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி தான் போட வேண்டும். மேலும் அந்த விளக்கின் மேல் முதல் கீழ் வரை சந்தனம் மற்றும் குங்குமம், அடியில் பூக்கள் ஆகியவை வைத்துவிட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் இந்த விளக்கை ஏற்றி வழிபட்டால் இன்பங்கள் பெருகி துன்பங்கள் மறையும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

(ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)