வைகாசி அமாவாசை எப்போது? – அந்த நாளின் முக்கியத்துவம் தெரியுமா?

பொதுவாகவே அமாவாசை திதியானது முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் தர்ப்பணம், வழிபாடு, விரதம் மேற்கொள்வது முக்கியமான ஒன்றாகும். இதனால் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் விரதம் பித்ரு சாபத்தை நீக்கும் எனவும் கூறப்படுகிறது.

வைகாசி அமாவாசை எப்போது? - அந்த நாளின் முக்கியத்துவம் தெரியுமா?

வைகாசி அமாவாசை

Updated On: 

19 May 2025 11:04 AM

பொதுவாக இந்து மதத்தில் ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் தலா 15 திதிகள் என மொத்தம் 30 திதிகள் உள்ளது. வளர்பிறை திதிகள் சுக்ல பக்ஷம் எனவும் தேய்பிறை திதிகள் கிருஷ்ண பக்ஷம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. 14 திதிகள் இரண்டிலும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவை மட்டும் வேறுபடும். இதில் அமாவாசை என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு இருக்கும் போது அதன் மீது சூரிய ஒளி முழுமையாக படும்போது அதன் வெளிச்சம் பூமியில் தெரிவதில்லை. இதுவே அமாவாசையாக பார்க்கப்படுகிறது. சந்திரனின் நிலைகள் எட்டாக இருக்கும் பட்சத்தில் அவற்றில் அமாவாசையும் ஒன்றாகும்.

சாஸ்திரத்தை பொருத்தவரை அமாவாசை திதியானது முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் திதி, தர்ப்பணம், வீட்டில் வழிபாடு, விரதம் ஆகியவற்றை நாம் மேற்கொள்ளலாம். இதனால் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நாளில் விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் எனவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வைகாசி அமாவாசை முக்கியத்துவம்

சந்திரனின் நிலைகளைப் பொறுத்து அமாவாசை ஒவ்வொரு மாதத்திலும் முன்பகுதி, நடுப்பகுதி, கடைசிப்பகுதியிலும் வரலாம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் அமாவாசை மே 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்கள் வழிபாடு செய்தால் மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. சாதாரணமாக வீட்டில் அவர்களது புகைப்படத்தின் முன்பு இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகள், பொருட்கள் வைத்து வழிபடலாம்.

சிலர் இந்நாளில் காலை மற்றும் மதிய வேளையில் விரதம் இருந்து மாலையில் அவற்றை முடித்து வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இன்னும் சிலர் அன்னதானம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் நீர் நிலைகளில் இந்நாளில் திதி அல்லது தர்ப்பணம் கொடுத்து தங்களுடைய பித்ருக்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

வைகாசி மாதம் என்பது சூரிய பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். அதேசமயம் இந்த மாதத்தின் அமாவாசையில் ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் அடைவார். அதனால் இந்நாள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அமாவாசை திதி நேரம்

வைகாசி மாதம் அமாவாசை திதியானது 2025 மே 26 ஆம் தேதி காலை 11:31 மணி முதல் மே 27ஆம் தேதி காலை 9.09 மணி வரை மட்டுமே உள்ளது. அமாவாசை திதியானது மே 26 ஆம் தேதி முற்பகுதியிலேயே வருவதால் அந்நாளே அமாவாசையாக கருதப்படுகிறது.

நீங்கள் உங்கள் முன்னோர்களை தவறாமல் வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வருடம் 365 நாட்கள் இல்லாவிட்டாலும் மாதத்தில் ஒரு அமாவாசை அவர்களுக்காக அர்ப்பணித்தால் வாழ்வாங்கான செல்வ வளம், குழந்தைப்பேறு, வியாபாரத்தில் லாபம் என பலவிதமான நன்மைகளையும் பெறலாம் என சொல்லப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)