மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?

சித்திரை மாத திருவாதிரை நாளில் கடைபிடிக்கப்படும் ஸ்ரீ லாவண்ய கௌரி விரதம், சஸபதி முனிவரின் தவத்தின் பயனாக உருவானது. இந்த விரதம் பெண்களின் மாங்கல்ய பலத்திற்கும், திருமணமானவர்களின் வாழ்வில் இணக்கத்திற்கும் உதவும் என நம்பப்படுகிறது. விரத நடைமுறைகள், பூஜை முறை பற்றி நாம் காணலாம்.

மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?

ஸ்ரீ லாவண்ய கௌரி விரதம்

Published: 

01 May 2025 11:01 AM

இந்து மதத்தைப் பொறுத்தவரை கடவுள்கள் ஏராளமானோர் பல்வேறு அவதாரங்களில் இருந்தாலும் அவர்களுக்கென தனி வழிபாட்டு முறைகள், விரதம் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியாக இந்த தொகுப்பில் நாம் ஸ்ரீ லாவண்ய கௌரி விரதம் (Sri Lavanya Gowri Viratham) பற்றி காணலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் மகரிஷிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி சித்திரை மாதம் (Chithirai Month) திருவாதிரை நாளில் இந்த விரதமானது கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு காரணம் ஒரு ஞானி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அதாவது உலக நன்மைக்காக சஸபதி என்ற மகாஞானி ஒருவர் கௌரி அன்னையை நினைத்து தவம் புரிந்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவாதிரை நாளில் கண்விழிக்கும் அந்த ஞானி தவத்தில் பலன்களை இந்த உலகில் வாழும் அத்தனை ஜீவ ராசிகளுக்கும் அர்ப்பணித்து விடுவார்.

ஸ்ரீலாவண்யா கௌரி விரதம் உருவான கதை

அப்படியாக வாழ்ந்து வந்த சஸபதி முனிவரின் பக்தியை எண்ணி கருணைக் கொண்ட கௌரி அம்மன் அவருக்கு என்ன வேண்டுமோ அதனை கொடுக்க எண்ணினாள். சஸபதி முனிவருக்கான மணப்பெண்ணை தாயின் உருவாக நின்று தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க விருப்பம் கொண்டாள். இதற்கு ஈசனும் சம்மதிக்க மண்ணுலகம் வந்த ஸ்ரீகௌரி தேவி அத்ரி முனிவரின் தர்மபத்தினியான அனுசுயா தேவியிடம் தான் மேற்கொள்ளப்போகும் தவம் குறித்து ஆலோசனை கேட்டார்.

அவர் ஸ்ரீலாவண்யா கௌரி விரதம் குறித்து தெரிவித்தாலும் அதனை எப்போது கடைபிடிக்க வேண்டும் என தெரியாமல் இருந்துள்ளது. ரிஷிகள் பலரும் இதுதொடர்பாக ஆய்வு செய்தும் விரத காலத்தை கணிக்க முடியவில்லை. இதற்கிடையில் பொதிகை மலைக்கு வந்த ஸ்ரீ கௌரி அன்னை அகத்திய முனிவரை சந்தித்தார்.

அவர் அன்னை தேவியிடம் தாங்கள் விரதம் இருக்க நல்ல நேரம் எது என்பதை ஈசனே அறிவிப்பார் என கூறினார். தொடர்ந்து ஸ்ரீ கௌரி தேவி பொதிகை மலையில் ஒற்றைக் கட்டை விரலில் நின்றபடி தவம் செய்தார். உலகமே இந்த தவத்தைப் பார்த்து வியந்தது. ஈசனின் கருணையால் தவத்தின் நோக்கம் நிறைவேறியது.

அம்பிகையின் தவத்தின் பலனாக அவளது வலது காலில் இருந்து ஜோதி எழுந்தது. அதன்மூலம் ஹேலை என்ற பெண் உருவானாள். அவர் விருப்பப்படியே சஸபதி – ஹேலை திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீலாவண்ய கௌரி விரதம் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று கடைபிடிக்க நாள் குறிக்கப்பட்டது.

விரதம் இருப்பது எப்படி?

2025 ஆம் ஆண்டு லாவண்ய கௌரி விரதம் மே 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராடி மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவை வைத்து மூன்று திரிகள் தான் கூடிய பசுமை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தற்போது அகத்தியர், அனுசியா, அத்ரி, சஸபதி, ஹேலை ஆகிய ரிஷிகளை மனதார வணங்கி விரதத்தை தொடங்கலாம். இந்த நாளில் மௌன விரதம் அல்லது உண்ணா நோன்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

60 வயதிற்கு மேற்பட்ட ஒரு தம்பதியினருக்கு இந்த தினத்தில் பாத பூஜை செய்து அவர்களே பெண்ணுக்கு கால் விரல்களில் மெட்டி அணிவித்து இருவரையும் மூன்று முறை வலம் வந்து வணங்கினால் புண்ணியம் கிடைக்கும். மேலும் இருவருக்கும் உணவு படைத்து ஒரு தாம்பூல தட்டில் புது துணிகள், மஞ்சள், குங்குமம், தாலி சரடு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழம், கண்ணாடி, வளையல், சீப்பு, இனிப்பு பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இந்த விரதத்தின் போது செவ்வரளி, தாமரை மலர்கள் கொண்டு அம்பிகையே வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். மாலையில் வீட்டுக்கு அருகில் உள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டு விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும் என நம்பப்படுகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மிக சிறந்த வரன் அமையும் என்றும், கணவன் மனைவிக்கான உறவானது பலமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)