Lord Murugan: நினைத்தது நடக்கும்.. முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பது எப்படி?

முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய், வியாழன், ஞாயிறு அல்லது சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம் போன்ற நல்ல நாட்களில் விரதத்தை தொடங்கலாம். தினமும் முருகனை வழிபட்டு, கந்த சஷ்டி கவசம் அல்லது திருப்புகழ் படிக்கலாம்.

Lord Murugan: நினைத்தது நடக்கும்.. முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பது எப்படி?

கடவுள் முருகன்

Published: 

20 May 2025 11:27 AM

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என சொல்வார்கள். அந்த வகையில் நம்மைச் சுற்றி பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் முருகன் அருள்பாலித்து வருகின்றான். தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கான பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் முருகனின் அறுபடை வீடுகளிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்லும் அளவுக்கு அவன் மீதான பக்தி பெருகியிருக்கிறது என சொல்லலாம். இப்படியான நிலையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப முருகனுக்கு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். விரதம் இருப்பது, வீட்டில் வழிபாடு செய்வது, கோயிலுக்கு சென்று முடி காணிக்கை, பணம், நகை ஆகியவை செலுத்துவது, மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது என நேர்த்திக் கடன்கள் வெவ்வேறு விதமாக இருக்கும். இந்த நிலையில் முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்தால் பல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

முருகப்பெருமான் மீதான நம்பிக்கை

கலியுக தெய்வம் என போற்றப்படும் முருகப்பெருமானிடம் நாம் என்ன வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. அப்படியாக முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்தால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி கேட்டது அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. மேலும் முருகனுக்கு உரிய சஷ்டி, கிருத்திகை, கார்த்திகை விரதம், தைப்பூசம், வைகாசி விசாகம் என பல்வேறு விசேஷ நாட்கள் வந்தாலும் இந்த 48 நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே காணலாம்.

விரதம் இருக்கும் முறை

இந்த விரதத்தை முருகனுக்கு உகந்த தினங்களாக கருதப்படும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தொடங்கலாம். இல்லாவிட்டால் மாதத்திற்கு இரண்டு முறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சஷ்டி திதியில் ஆரம்பிக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் முருகனுக்கு உரிய நட்சத்திரங்களாக கருதப்படும் கார்த்திகை, விசாகம், பூசம் ஆகிய நாட்களிலும் நாம் விரதம் இருக்க ஆரம்பிக்கலாம்.

இந்த 48 நாட்களும் தினமும் காலையில் எழுந்து புனித நீராடி வீட்டிற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் முருகப்பெருமானிடம் நாம் எதை நினைத்து விரதம் இருக்கிறோமோ அதனை மனதார வேண்ட வேண்டும். ஒருவேளை அருகில் எந்த கோயிலும் இல்லை என்ற சூழலில் இருப்பவர்கள் வீட்டில் முருகனின் திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். அப்போது முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்ட பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

48 நாட்கள் செய்ய வேண்டியவை

இந்த 48 நாட்களும் நீங்கள் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் கடைபிடிக்கலாம். அது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் பணி நிமித்தம் காரணமாக பகல் நேரங்களில் விரதம் இருக்க முடியாது அவர்கள் இரவு நேர விரதத்தையும் கடைபிடிக்கலாம். உடல் நலத்தில் பிரச்சினை இருப்பவர்கள் பால் அல்லது பழம் எடுத்துக் கொண்டு விரதத்தை தொடரலாம்.

நீங்கள் பகல் நேரங்களில் விரதம் இருக்காவிட்டாலும் காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் முருகனின் திரு உருவப் படத்தின் முன் ஷட்கோண கோலம் போட்டு அதில் தீபம் ஏற்றி 108 முறை ஓம் சரவணபவ எனும் மந்திரத்தை சொல்லலாம். விரதத்தின் கடைசி நாளில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சிலர் மாதவிடாய் நாட்களில் ஆன்மீக காரியங்களை தவிர்ப்பார்கள். அவர்கள் அத்தகிய நாட்களை தவிர்த்து விட்டு மீதமுள்ள நாட்களை கணக்கிட்டு தொடர்ந்து விரதத்தை மேற்கொள்ளலாம்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)