வாழ்க்கையில் இந்த 7 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க!
சாணக்கிய நீதிப்படி, வாழ்க்கையில் சில விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் பலவீனங்கள், எதிர்காலத் திட்டங்கள், பொருளாதார நிலை, தர்மம் செய்யும் செயல்கள் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்தினால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள்
வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிலையிலும் சரியான வளர்ச்சியை நோக்கி செல்ல சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இதிகாசங்கள் தொடங்கி தன்னம்பிக்கை பேச்சுக்கள் வரை வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் தெரியாத வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ட்விஸ்ட் மேல ட்விஸ்டாக தான் செல்லும் என சொல்வார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் எல்லாரும் நல்லவர்களாவோ, எல்லா நேரமும் நமக்கு ஆதரவாகவோ செயல்பட மாட்டார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். சூழல் ஒரு மனிதனை எப்படிப்பட்டவனாக கூட மாற்றலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் ஆச்சார்ய சாணக்கியர் எழுதிய சாணக்ய நீதியில் வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை யாரிடமும் எப்போதும் தம்பட்டம் அடித்து சொல்லவேக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
இந்த விஷயங்களை யாரிடமும் சொல்லாதீர்கள்
முதலாவதாக இவ்வுலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும் என்பது இயற்கையான நிகழ்வாகும். ஆனால் எக்காரணம் கொண்டும் எந்த சூழலிலும் நீங்கள் உங்கள் பலவீனத்தை யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது. அது எதிராளிகளை உங்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள உதவும். நீங்கள் எளிதில் கோபப்படும் சுபாவம் கொண்டவர் என்பதை தெரிந்துக் கொண்டவர்கள் யாராவது உங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் உங்கள் பிம்பத்தைக் கெடுக்கும் நிலை உண்டாகலாம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பெரிய கனவுகள், திட்டங்கள் மற்றும் இலக்குகள் இருக்கும். அவை நிறைவேறும்போது மட்டுமே அவற்றைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும். முன்கூட்டியே சொன்னால் அது எதிர்மறையான முடிவைப் பெறலாம். சில நேரங்களில் திட்டம் முடியும் வரை உங்களைப் பிடிக்காதவர்கள் யாராவது உங்கள் மன உறுதியை உடைக்க அல்லது உங்கள் பாதையில் தடைகளை உருவாக்க முயற்சிக்கலாம். உங்கள் அன்பையும் உறவுகளையும் அனைவரிடத்திலும் அறிமுகம் செய்வதைத் தவிர்க்கவும். பல நேரங்களில் உங்களுக்கு எதிரானவர்கள் மகிழ்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த உறவை கெடுக்க முயற்சி செய்வார்கள்.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் வருமானம், வங்கி இருப்பு மற்றும் சொத்துக்கள் பற்றி அனைவரிடத்திலும் வெளிப்படையாக சொல்லக்கூடாது. ஒருவேளை நீங்கள் பணக்காரராக இருந்தால், பணத்திற்காக மட்டுமே சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை நீங்கள் பலவீனமாக இருந்தால், நீங்கள் புறக்கணிக்கப்படலாம். சில நேரங்களில் உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் யாருக்காவது உதவி செய்வது அல்லது நன்கொடை அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆனால் அதை ரகசியமாக வைத்திருங்கள்.
நீங்கள் தர்மத்தை விளம்பரப்படுத்தினால் சுற்றியிருப்பவர்கள் உங்கள் நோக்கங்களை சந்தேகிப்பார்கள். உங்கள் நல்ல எண்ணத்தை கேலி செய்யலாம். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு பயமாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ உணர்ந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் அந்த பயத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
(சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)