சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? – இதை ட்ரை பண்ணுங்க!

பணம் வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கருவிகளில் ஒன்றாக உள்ளது. அத்தகைய பணம் நிலைக்க வீட்டுத் தூய்மை, விளக்கு ஏற்றல், தர்மம், முன்னோர் வழிபாடு முக்கியம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சனி, ராகு, கேது கிரகங்களின் தாக்கத்தைக் குறைக்க ஹனுமான் சாலிசா பாராயணம், சனிக்கிழமையில் சனி பகவான் வழிபாடு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டுமா? - இதை ட்ரை பண்ணுங்க!

பணம் நிலைக்க ஆன்மிக டிப்ஸ்

Published: 

21 May 2025 13:07 PM

வாழ்க்கையில் பணம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்கிற எண்ணம் அனைவரது மனதிலும் அழியாத சுவடாக மாறிவிட்டது. அத்தகைய பணத்தை சம்பாதிப்பதும், அதனை சேமிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. அது வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என சொல்லலாம். ஒருவன் பணத்தால் வாழ்வது,வீழ்வதும் கடந்தகால வாழ்க்கையின் கர்மாவையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது என சொல்லலாம். ஒவ்வொரு பிறவியும் நாம் முற்பிறவியில் செய்யும் செயல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அதேசமயம் நிகழ்காலத்தில் நம் வாழ்க்கை நாம் செய்யும் செயல்களால் உருவாக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் நாம் பண விஷயத்தில் சில நடைமுறைகளைப் பின்பற்றினால் அது நம்மிடத்தில் நிலைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதனைப் பற்றிக் காணலாம்.

பணம் நிலைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்

பொதுவாக செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி திகழ்கிறாள். அதேசமயம் அவர் எப்போதும் தூய்மையை விரும்புகிறவள். இப்படிப்பட்ட நிலையில் நாம் வசிக்கும் வீடு, இடம் சுத்தமாக இல்லாவிட்டால், எந்தவித வழிபாடும் செய்யாவிட்டால், சமையலறை சரியாக இல்லையென்றால் அந்த வீட்டில் லட்சுமி தேவி வாசம் இருக்காது என சொல்லப்படுகிறது. எனவே எப்போது வீட்டை சுத்தமாக வைத்தால் லட்சுமி தேவி வருகை நீண்ட காலம் இருக்கும்.அதேபோல் காலை, மாலை இருவேளையிலும் விளக்கு ஏற்றப்பட வேண்டும்.

சிலருக்கு பணதின் அருமை தெரியாமல் அது எளிதாகவோ அல்லது கடின உழைப்பின் மூலமோ கைக்கு வரும் பட்சத்தில் மோசமான முறையில் வீணாக்குகிறார்கள். தீமை விளைவிக்கும் விஷயங்களுக்காகவும், தங்களுடைய வெளிப்புற அழகை மேம்படுத்துவதற்காகவும் பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் கவனமாகப் பயன்படுத்தப்படாத பணம் என்றும் நிலைக்காது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் சேவை அல்லது தர்மத்திற்கு பயன்படுத்தப்படாத பணம் கண்டிப்பாக கையை விட்டு செல்லும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் எந்த வழியில் பணம் கிடைக்கும்போதும் பணிவாகவே இருக்க வேண்டும். பணத்தை நல்ல செயல்களில் முதலீடு செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும்.

இதையும் பின்பற்றலாம்

ஒருவருக்கு ஜாதகத்தில் சனி அல்லது ராகு மற்றும் கேது கிரகங்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டால், பண மோசடி, பணம் திருட்டு மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதைக் குறைக்க,தினமும் ஹனுமான் சாலிசாவை உச்சரிக்க வேண்டும். மேலும் சனிக்கிழமை நாளில் சனி பகவானை வழிபட்டு கருப்பு நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நம் முன்னோர்களையும், குல தெய்வத்தையும் கண்டிப்பாக மதித்து வழிபடுதல் என்பது இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெற முடியாது என்பது ஐதீகமாக உள்ளது. பெற்றோர்கள்தான் வாழ்க்கையில் முதல் கடவுள்கள் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு அமாவாசை நாளிலும் முன்னோர்களுக்கு நீரால் அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் குல தெய்வத்தை வீட்டிலும், முடிந்தால் நேரிலும் சென்று வழிபட வேண்டும். அப்படிச் செய்தால்தான் வீட்டில் பணம் தங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த வழிமுறைகளையெல்லாம் பக்தியுடன் தொடர்ந்தும் பின்பற்றினால், பணப் பிரச்சினைகள் குறையும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த தகவலானது சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அறிவியல்பூர்வ ஆதாரம் கிடையாது. டிவி9 தமிழ் இதற்கு பொறுப்பேற்காது)