Guru Peyarchi 2025: தொட்டதெல்லாம் வெற்றி.. கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

2025-ம் ஆண்டு குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, குடும்பம், நிதி என அனைத்து அம்சங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயண யோகம், பதவி உயர்வு, குடும்ப ஒற்றுமை போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Guru Peyarchi 2025: தொட்டதெல்லாம் வெற்றி.. கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

கன்னி ராசி பலன்கள்

Published: 

06 May 2025 14:14 PM

ஜோதிடத்தை (Astrology) பொருத்தவரை கிரகங்களின் பெயர்ச்சிகள் தனிமனித வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அதனால்தான் ஒவ்வொரு நிகழ்வு நடைபெறும் போது ஒவ்வொரு ராசிகளும் கவனமுடன் தங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஜோதிட கிரகங்களில் ஒன்றான வியாழனின் அதிபதியாக கருதப்படும் குரு பகவான் 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி (Guru Peyarchi 2025) அடைகிறார். இந்த நிகழ்வானது 2025 மே 11ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்திலும், மே 14ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்திலும் நடைபெறுகிறது. இப்படியான நிலையில் இந்த குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் என்னென்ன பலன்களை பெறுவார்கள் என்பது பற்றி நாம் காணலாம்.

உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும்

கன்னி ராசியை பொறுத்தவரை இதுவரை பாக்கியஸ்தாமான ரிஷப ராசியில் சஞ்சரித்த குரு பகவான் இனி ஜீவன ஸ்தானமாகிய மிதுன ராசிக்கு மாறுகிறார். அது மட்டுமல்லாமல் அங்கிருந்து சனி மற்றும் ராகுவை ஒன்பதாம் பார்வையாக காண்கிறார். இதனால் அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைப்பது கடினமாகும். ஆனால் தாமதம் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் குரு பகவான் ஆசியால் உங்களை வந்து சேரும். பணப் பிரச்சனை நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் அகன்று மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களில் ஒரு பாதியை அடைப்பீர்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு சிறந்த வரன்கள் அமையும்.

வெளிநாடு செல்லும் யோகம் அமையும்

மிதுன ராசியில் குரு பகவான் நுழைவது பணியிடத்தில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. அதன்படி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் அமையும். ஆனால் சக்திக்கு மீறிய உழைப்பை கொட்ட வேண்டி இருக்கும்.

கன்னி ராசிக்கு சனி பகவானும் ராகு பகவானும் அனுகூலமாக இருப்பதால் இந்த குரு பெயர்ச்சியில் மிகக் கடுமையான போட்டிகளை சமாளித்து வெற்றிகளை அடைவீர்கள். லாபம் ஈட்டும் அதே சமயத்தில் வருமானத்தை விரிவுபடுத்த தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அலைச்சல் மற்றும் உடல் உழைப்பு காரணமாக சோர்வு ஏற்பட்டாலும் தொழிலில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பீர்கள். நிதி நிறுவனங்களில் பணம் பெற்று இருந்தால் முறையாக செலுத்தவும், இல்லாவிட்டால் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது.

லாபத்தை பெற்று தரும் குரு பகவான் புதிய முதலீடுகளுக்கும் வழிவகுக்கிறார். மேலும் தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வர வேண்டிய சூழல் உண்டாகலாம். கலைத்துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும்.

கல்வி.. விவசாயம்..பெண்களுக்கான பலன்கள்

கல்விக்கு அதிபதியாக திகழும் புதன் கிரகத்தின் ஆட்சி வீடு என்பது மிதுன ராசியாகும். அங்கு சென்று குரு அமர்வதால் கல்வியில் மாணவ மாணவியர்களுக்கு சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். கல்வி செல்வத்துடன் பக்தி ஞானமும் வளரும் தலைமுறையினருக்கு  இந்நேரத்தில் கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சி காலம் விவசாயம் செய்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற நல்ல வினைச்சலும் லாபமும் கிடைக்கக்கூடியதாக அமையும். இதனால் பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பீர்கள். புதிய நிலங்கள் மற்றும் கால்நடைகள் வாங்கும் யோகம் அமையும். சரியாக சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

பெண்களைப் பொறுத்தவரை இந்த காலகட்டம் அவர்களுக்கு அனுகூலமாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். குழந்தைகள் வளர்ச்சியில் இன்பம் காண்பீர்கள். நகைகள் வாங்கும் சூழல் உருவாகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லும்போது உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செல்வாக்கு பெறுவீர்கள். பணியிடங்களில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி நடைபெற்றவுடன் கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஏழை ஒருவருக்கு உணவு தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். மேலும் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் கோயிலுக்கு மாலை நேரத்தில் சென்று மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சொல்லப்பட்டுள்ள தகவல்களின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)