சார்மினாரில் பயங்கர தீ விபத்து.. சூழ்ந்த கரும்புகை.. உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு!

charminar Fire Accident : ஹைதரபாத் சார்மினாருக்கு அருகே மீர்சௌக் பகுதியில் உள்ள குல்சார் ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சார்மினாரில் பயங்கர தீ விபத்து.. சூழ்ந்த கரும்புகை.. உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு!

சார்மினார் அருகே தீ விபத்து

Updated On: 

18 May 2025 12:13 PM

தெலங்கானா, மே 18 : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்  உள்ள சார்மினாருக்கு (Charminar fire accident) அருகே மீர்சௌக் பகுதியில் உள்ள குல்சார் ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ள நிலையில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களில் நான்கு குழந்தைகள், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் மூன்று பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சார்மினார் அருகே தீ விபத்து நடந்தது எப்படி?

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தின் அடையாள சின்னமாக சார்மினார் உள்ளது. சார்மினாருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சார்மினார் பகுதி முழுவதும் எப்போது கூட்டமாகவே இருக்கும். மேலும், சார்மினார் சுற்றி ஆயிரக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2025 மே 18ஆம் தேதி காலை 6.30 மணியளவில் சார்மினாருக்கு அருகே மீர்சௌக் பகுதியில் உள்ள குல்சார் ஹவுஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தீ  அடுத்தடுத்த கட்டிடத்திற்கு பரவியது. இதனால், தீயை கட்டுப்படுத்த சில மணி நேரமானதாக தெரிகிறது. இதனால், அந்தந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

அந்த கட்டிடத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் வசிக்கின்றனர். தீ  பரவியதை அடுத்து, பலர் மாடி வழியாக தப்பி சென்றிருக்கிறனர். இருப்பினும், இந்த விபத்தில் பலர் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும்  பணிகள் காலை முதல் நடந்து வந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், சார்மினாரில் நடந்த தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கட்டிடத்திற்குள் சிக்கி உள்ளவர்களை மீட்க தேவை அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றவும், முறையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.