“பிரச்னை வேண்டாம்” இந்தியா பாகிஸ்தான் மோதல்… ராணுவ அதிகாரிகள் விளக்கம்!
India Pakistan Tensions : இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி, கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து மூன்று பேரும் விளக்கம் அளித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
டெல்லி, மே 10: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு, பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான் என எல்லையோரங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே தொடர் தாக்குதலும், பதிலடிகளும் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு இதே சூழல் தான் இருந்து வருகிறது. 2025 மே 9ஆம் தேதி இரவு கூட, இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இதனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தான் தாக்குதல்
குறிப்பாக, டெல்லியை நோக்கி ஒரு ஏவுகணையை பாகிஸ்தான் அனுப்பிய நிலையில், அதனையும் இந்தியா முறியடித்தது. இந்த சூழலில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி, கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விக்ரம் மிஸ்ரி, “நான் பலமுறை கூறியுள்ளேன். பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் பதற்றத்தை மேலும் உருவாக்கியிருக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் தீவிரமான தாக்குதலுக்கு பொறுப்புடனும், அளவோடும் இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது” என்று கூறினார்.
மேலும், சோஃபியா குரேஷி பேசுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. அது இந்தியாவின் இராணுவ தளங்களைத் தாக்க ட்ரோன்கள், நீண்ட தூர ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்தியா பல ஆபத்துகளை நடுநிலையாக்கியது. ஆனால் பாகிஸ்தான் 26க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது.
ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்
உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் உள்ள நமது உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1:40 மணிக்கு பஞ்சாபின் விமான தளத்தை குறிவைக்க அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் மருத்துவமைனை மற்றும் பள்ளிகளையும் கூட தாக்கினர்” என்று கர்னல் சோபியா குரேஷி கூறுகிறார்.
மேலும் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நகர்த்துவது தெரிகிறது. இது மேலும் தீவிரப்படுத்துவதற்கான தாக்குதல் நோக்கத்தைக் குறிக்கிறது. இந்திய ஆயுதப் படைகள் உயர் செயல்பாட்டுத் தயார்நிலையில் உள்ளன. மேலும் அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட எதிர்கொண்டு விகிதாசார ரீதியாக பதிலளிக்கப்பட்டுள்ளன.
S-400 ஆயுதத்தை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாக பாகிஸ்தான் தவறனா தகவலை கூறி வருகிறது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா நிராகரிக்கிறது. பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதனையே பாகிஸ்தான் செய்ய வேண்டும்.” என்றார்