மொத்தம் ரூ.11 கோடி.. மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பாம்புகடி ஊழல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. நடந்தது என்ன?

Snake Bite Scam : மத்தியப் பிரதேசத்தின் சிவானி மாவட்டத்தில், ரூ.11.26 கோடி மதிப்பிலான பாம்பு கடி இழப்பீட்டு மோசடி அம்பலமாகியுள்ளது. போலி இறப்புச் சான்றிதழ்கள் மூலம், 47 பேரின் பெயரில் இழப்பீடு பெறப்பட்டது. இந்த மோசடியில் 46 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.11 கோடி.. மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பாம்புகடி ஊழல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. நடந்தது என்ன?

பாம்புகடி ஊழல்

Published: 

21 May 2025 08:33 AM

மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஊழல் அந்த மாநிலத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இரண்டு முதலமைச்சர்களின் ஆட்சியில் சத்தமில்லாமல் நடந்த இந்த விவகாரம், மூன்றாவது முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. கமல்நாத் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கங்களின் போது, ​​இந்த ஊழல் நபர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த மோசடி தற்போதைய முதல்வர் மோகன் யாதவின் ஆட்சியின் போது அம்பலமாகியுள்ளது. அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்தாலும் அவை எல்லாம் அரசு ஊழியர்களின் மேற்பார்வையின்படியே சென்று சேர்கிறது. அப்படிப்பட்ட அரசு ஊழியர்களே மோசடியில் இறங்கினால் என்ன ஆகும்? அப்படியான சம்பவம்தான் தற்போது மத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது

என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தின் சிவான் மாவட்டத்தில் ரூ.11.26 கோடி மதிப்புள்ள பாம்பு கடி மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாம்பு கடித்து யாராவது இறந்தால் மத்தியப் பிரதேச அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. இதை ஒரு சாதகமாகக் கருதி சில அதிகாரிகள், சட்டவிரோதமாக மோசடி செய்துள்ளனர். அதாவது ஒரே நபரின் பெயரில் 30 முறை இழப்பீடு வசூலிக்கப்பட்டுள்ளது. ரமேஷ் என்ற நபர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறி 30 வெவ்வேறு ஆவணங்களை உருவாக்கி, அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பலன் கிடைத்தது. ராம்குமார் என்ற மற்றொரு நபர் இறந்துவிட்டதாகக் கூறி 19 முறை 38 போலி ஆவணங்களை உருவாக்கி, 81 லட்சத்தை அபகரித்துள்ளனர்

இந்த வழியில், மொத்தம் 47 இறந்தவர்களின் பெயர்களில் போலி இறப்புச் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டு இழப்பீடு பெறப்பட்டது. இந்த மோசடிக்குப் பின்னால் ஒரு எஸ்.டி.எம், நான்கு தாசில்தார்கள் மற்றும் மூன்றாம் நிலை ஊழியர்கள் உட்பட 46 பேர் வரை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மோசடி 2019 முதல் 2022 வரை கண்டறியப்படாமல் தொடர்ந்ததுதான் ஆச்சரியம்.

கைது நடவடிக்கை

மத்தியப் பிரதேசத்தின் சிவானி மாவட்டத்தைச் சேர்ந்த உதவியாளர் 3ம் நிலை ஊழியரான சச்சின் தஹாயக், இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்ததாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவருடன் சேர்த்து, மேலும் 46 பேரின் பெயர்களும் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த ஊழலில் அப்போதைய எஸ்.டி.எம் அமித் சிங்குடன், ஐந்து தாசில்தார்களும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது

நிதி அமைச்சகத்தின் சிறப்புக் குழு நடத்திய விசாரணையில், சில நேரங்களில் இறப்புச் சான்றிதழ், காவல்துறை சரிபார்ப்பு அல்லது பிரேத பரிசோதனை அறிக்கை இல்லாமல் இந்த நிவாரணம் அங்கீகரிக்கப்படுவது தெரியவந்தது. விசாரணையில், முக்கிய குற்றவாளி பயனாளிகளின் கணக்குகளுக்குச் செல்ல வேண்டிய பணத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் கணக்குகளுக்கு திருப்பிவிட்டதாக தெரியவந்தது. இந்த வழக்கில் சச்சின் தஹாயக் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாம்பு கடி இழப்பீட்டு மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ரோஹித் கௌஷல் தெரிவித்தார். ரூ.11.26 கோடி மோசடியில் விசாரணை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோசடி தொடர்பான அறிக்கை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.