Operation Sindoor: பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 இடங்களை தாக்க முயற்சித்தது தோல்வியடைந்தது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானின் திட்டம் அதிரடியாக முறியடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்
பஞ்சாப், மே 8: ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் 15 இடங்களில் இந்தியாவை தாக்க முயன்ற பாகிஸ்தானின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல இராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதலானது 2025, மே 7 ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அவந்திபோரா, அமிர்தசரஸ், ஆதம்பூர், கபுர்தலா, ஜலந்தர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, புஜ் போன்ற பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீசிய ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 8 ஆம் தேதியான இன்று அதிகாலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணை HQ-9 வகையைச் சேர்ந்ததாகும். இது சீனாவில் தயாரிக்கப்பட்டு தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணையாகும்.
மேலும் இந்த ஏவுகணை தாக்குதல் பாகிஸ்தானின் நடவடிக்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. மறுபுறம் பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் லாகூரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை ஏவுகணை தடுப்பானாக உள்ள எஸ்400 சுதர்சன் சக்ரா முறியடித்தது.
தொடரும் தாக்குதல்களால் பதற்றம்
கடந்த 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பகல்ஹாம் பகுதியில் திடீரென பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள், சுற்றுலாப் பயணிகள் என 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணம் என குற்றம் சாட்டிய இந்திய அரசு அந்நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டித்தது. இப்படியான நிலையில் 2025, மே 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் போர் ஒத்திகை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மே 7 நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் இடங்கள் அழிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நிலவரத்தை ஒட்டுமொத்த உலக நாடுகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.