Operation Sindoor Updates : ஆபரேஷன் சிந்தூர்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

India Pakistan Tension Updates : 2025, மே 7ம் தேதியான இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. பஹாவல்பூர், முரிட்கே, பாக், குல்பூர், சவாய், பிலால், பர்னாலா, மஹ்மூனா கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா தொடர் தாக்குதல்களை நடத்தியது.

Operation Sindoor  Updates : ஆபரேஷன் சிந்தூர்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

ஆபரேஷன் சிந்தூர் நேரலை தகவல்கள்

Updated On: 

10 May 2025 15:01 PM

ஆபரேஷன் சிந்தூர் நேரலை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், இந்நிலையில் இன்று மே 7 2025 அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. சுமார் 1.30 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற திட்டத்தின் கீழ், பஹாவல்பூர், முரிட்கே, பாக், குல்பூர், சவாய், பிலால், பர்னாலா, மஹ்மூனா கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. இந்த இடங்களிலிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே குறிவைத்து நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 May 2025 07:04 PM (IST)

    பதற்றம் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை: விங் கமாண்டர் வியோமிகா சிங்

    ஆபரேஷன் சிந்தூர் நிலவரம் குறித்து விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பதற்றம் அதிகரிக்காமல் இருப்பதற்கான நிலையை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

  • 08 May 2025 07:01 PM (IST)

    பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே பேச்சுவார்த்தையா? – விக்ரம் மிஸ்ரி பதில்

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஒருவருக்கொருவர் பேசியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதிலளித்துள்ளார். அதில், இரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

  • 07 May 2025 07:25 PM (IST)

    இந்த தாக்குதலை என்னைக்கும் மறக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப்

    இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது மட்டுமல்லாமல், நாட்டை அவமானப்படுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார். மேலும் 80 இந்திய விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதலின் விதம் என்றும் நினைவில் இருக்கும் எனவும் அவர் கூறினார். பல நாடுகளுடன் தான் பேசியதாகவும், பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன். ஆனால் அவர்களின் விளக்கத்தை இந்தியா ஏற்க மறுத்ததாகவும் செபாஸ் ஷெரீப் கூறினார்.

  • 07 May 2025 06:39 PM (IST)

    பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் உயிரிழப்பு

    இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​குருத்வாராவில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நடத்திய இத்தகைய தாக்குதலில் இதுவரை ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 07 May 2025 05:26 PM (IST)

    அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் மீது தாக்குதல் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகக் கூறினார். இந்திய ராணுவத்தைப் பாராட்டிய அவர், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிட்டார்.

  • 07 May 2025 04:00 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர்.. கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி நெகிழ்ச்சி

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “எனது கணவர் அமைதியை நம்பியதால் பாதுகாப்புப் படைகளில் சேர்ந்தார். பயங்கரவாதத்தின் நிழல்களிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டைக் காண அவர் விரும்பினார். இன்று அவர் இல்லையென்றால் அவரது ஆன்மா சாந்தியடைந்ததாக நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

  • 07 May 2025 03:01 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பதற்றம்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம்!

    பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்படியான நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோனாதன் பவல், சவுதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் ஐபன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷேக் தஹ்னூன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி அல் ஷம்சி மற்றும் ஜப்பான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மசடகா ஒகானோ உள்ளிட்ட பல நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேசி நிலைமையை விளக்கினார்.

  • 07 May 2025 02:27 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை.. அமித்ஷா அவசர ஆலோசனை!

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் எல்லை மாநிலங்களின் முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் லடாக் துணை ஆளுநர் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர்.

  • 07 May 2025 01:49 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. குடியரசுத்தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கினார்.

  • 07 May 2025 01:26 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

     ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 07 May 2025 01:03 PM (IST)

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு!

    பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வரவேற்று இஸ்ரேல் ட்வீட் செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவ நடவடிக்கைகளின் சரியானது என குறிப்பிட்ட இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தற்காப்புக்காக தாக்குதல் நடத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

  • 07 May 2025 12:36 PM (IST)

    மசூத் அசார் வீட்டில் தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

    தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் மசூத் அசார் வீட்டில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் மசூத் அசார் வீட்டில் இல்லை என சொல்லப்படுகிறது.

  • 07 May 2025 12:23 PM (IST)

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை வான்வழி தாக்குதல் மூலம் தகர்த்தெறிந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  • 07 May 2025 12:22 PM (IST)

    பொதுமக்களுக்கு பாதிப்பில்லை

    இந்த தாக்குதலில் ராணுவ இலக்குகளோ அல்லது பொதுமக்கள் இருப்பிடமோ எதுவும் தாக்கப்படவில்லை என்றும் தீவிரவாத தலைவர்கள் இருப்பிடம் மட்டுமே தகர்க்கப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 07 May 2025 12:22 PM (IST)

    சேதம் ஏதுமில்லை

    இந்திய விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் காலாற்படை மூன்று பிரிவினும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் விமானங்கள் சேதம் அடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்னவென்றால் முக்கிய பயங்கரவாத தலைவர்கள் இருப்பிடத்தை தாக்குவதே ஆகும். இந்தியாவில் இருக்கக்கூடிய RAW அதிகாரிகள் இது தொடர்பாக 9 இடங்கள் தேர்வு செய்து கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 07 May 2025 12:21 PM (IST)

    பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல்

    ஏப்ரல் 22ஆம் தேதி 2025 பஹல்காமில், பட்ட பகலில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாப்பு துறையிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தது இதற்கெல்லாம் சேர்த்து தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆப்ரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.