பெரும் சிக்கல்… சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்.. நீதிமன்றம் கிடுக்குபிடி!
National Herald Case : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவு 223-ன் படி வழக்கு குறித்து அறிய சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

சோனியா - ராகுல் காந்தி
டெல்லி, மே 02 : நேஷனல் ஹெரால்டு (National Herald Case) பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2025 ஏப்ரல் 25ஆம் தேதி நடந்த விசாரணையில் குற்றப்பத்திரிகையில் இருக்கும் குறைப்பாடுகளை சரி செய்த பிறகு, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு 2025 மே 2ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்
1938 ஆம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேஷ்னல் ஹெரால்டு என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவரை தவிர, சுமார் 5 ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இதன் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த பத்திரிகை நிறுவனம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் குரலை வலுவாக எழுப்பினர்.
இதனால், 1942 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளைத் தடை செய்தனர். நேஷனல் ஹெரால்டு 1945 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு அந்தப் பத்திரிகையின் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளியிடப்பட்டு, காங்கிரஸின் கொள்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் ஊடகமாக மாறியது. 1962 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்திற்கு டெல்லி-மதுரா சாலையில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த பத்திரிகை வெளியீடு மீண்டும் நிறுத்தப்பட்டது.
நிறுவனம் நஷ்டத்தில் செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேஷ்னல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் 2011ஆம் ஆண்டில் யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தில் டெல்லி உள்ளிட்ட இடங்களில் ரூ.5,000 கோடி சொத்துக்கள் உள்ளன.
நீதிமன்றம் கிடுக்குபிடி
Delhi’s Rouse Avenue Court issues notice to Congress leaders Sonia Gandhi, Rahul Gandhi, and others on a chargesheet filed against them by the Enforcement Directorate in connection with the National Herald money laundering case.
— ANI (@ANI) May 2, 2025
இந்த நிறுவனத்தின் 38 சதவீதம் பங்குகளை ராகுல் காந்தி, சோனியா காந்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மற்ற 24 சதவீத பங்குதாரர்களில் காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே மற்றும் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா ஆகியோர் வைத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். அதில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.2,000 சொத்துகளை ராகுல், சோனியா காந்தி அபகரித்ததாகவும், 99 சதவீத பங்குகளை ரூ.50 லட்சத்திற்கு யங் இந்தியன் நிறுவனத்திற்கு மாற்றியதாகவும் குற்றச்சாட்டி உள்ளார்.
இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 8 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவு 223-ன் படி வழக்கு குறித்து அறிய சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.