விடிந்தால் நீட் தேர்வு.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. அறையில் அதிர்ச்சி சம்பவம்!
Kota Neet Aspirant Suicide : ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 4ஆம் தேதியான இன்று நீட் தேர்வு எழுத உள்ள நிலையில், மாணவி நேற்று தனது அறையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

மாதிரிப்படம்
ராஜஸ்தான், மே 04 : நீட் தேர்வு எழுத உள்ள மாணவவி தற்கொலை (Kota Neet Aspirant Suicide) செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 4ஆம் தேதியான இன்று நீட் இளநிலை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி தனது அறையில் 2025 மே 3ஆம் தேதியான நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. கடந்த பல ஆண்டுகளாக கோட்டாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நகரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
விடிந்தால் நீட் தேர்வு
2025 மே 4ஆம் தேதி இன்று தேர்வு எழுத இருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2025 மே 3ஆம் தேதியான நேற்று மாலை அறையில் உள்ள இரும்பு கிரில்லில் மாணவி தனது துப்பாட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வராததல், பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், அவரது அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார். இன்று காலை 9 மணிக்கு போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
மாணவி எடுத்த விபரீத முடிவு
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கோட்டாவில் பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு நீட் பயிற்சி மாணவர்கள் 17 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,453 மையங்களில் 2025 மே 4ஆம் தேதியான இன்று நீட் இளநிலை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 22.7 லட்சத்திற்கு அதிகமான தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)