வெளியே வெயில்… அலுவலகத்தில் ஏசி… உடல் நலனை கடுமையாக பாதிக்கும் – தவிர்ப்பது எப்படி?

Summer Health Tips : சிறிய இடைவேளைகளில் கடும் வெயிலையும் ஏசி குளிரையும் எதிர்கொள்ளும் போது அது நம் உடலை பாதிக்கும். குறிப்பாக நீண்ட நேரம் அலுவலகத்தின் ஏசியில் இருந்து விட்டு வெளியே வெப்பமான சூழ்நிலைக்கு போகும்போது தலைவலி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற பல உடல்நல பிரச்னைகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளியே வெயில்... அலுவலகத்தில் ஏசி... உடல் நலனை கடுமையாக பாதிக்கும் - தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Apr 2025 22:11 PM

கோடைகாலம் (Summer) தொடங்கியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸை கடந்து விட்டது. இதனையடுத்து ஏசி (AC) என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக கோடைகாலங்களில் ஏசி இல்லாமல் சமாளிக்க முடியாது. பல அலுவலகங்களில் ஏசி இருப்பது பணியாளர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் மற்ற நேரங்களில் வெயிலை சமாளிப்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. மேலும் அதிக நேரம் ஏசியில் மீதி நேரம் வெயிலில் இருப்பதும் உடல் நலத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. திடீர் வெப்ப மாற்றம் உடலின் வெப்ப நிலையை பாதிக்கிறது. இதனால் தலைவலி, தொண்டை வலி, சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல், தசை வலி, உள்ளிட்ட பிரச்சனைகள் கூடும். பிசினஸ் ஸ்டேண்டர்டில் வெளியான கட்டுரையின் படி இந்த மாறுபட்ட வெப்ப நிலையில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நீண்ட நேரம் ஏசியில் இருந்து விட்டு வெப்பமான வெளிச்சூழலை எதிர்கொள்ளும்போது, நம் உடலின் வெப்ப நிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வெப்ப நிலை மாறுபாட்டை உடல் சமநிலைப்படுத்த முடியாமல் தவிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, தலைவலி, குளிர், தொண்டை வலி, காய்ச்சல், மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். சில சமயங்களில் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

மேலும் ஏசியில் நீண்ட நேரம் இருக்கும்போது, குறிப்பாக உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்த படி வேலை பார்ப்பவர்களுக்கு மூட்டுகளில் வலி மற்றும் தசை வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதேபோல், இந்த வெப்பம் மற்றும் குளிர் மாறுபாடு, இதய நோய்களுக்கான ஆபத்துகளை அதிகரித்தும் எனவும் கூறப்படுகிறது.

உடல்நலத்தை பாதுகாக்க வேண்டிய சிறந்த வழிமுறைகள்

  • காட்டன் போன்ற காற்று செல்லக்கூடிய துணிகளை தேர்வு செய்யுங்கள். சின்தெட்டிக் துணிகளை தவிர்க்கவும். அதே நேரம் ஏசி அதிகமான அலுவலகங்களில் ஸ்கார்ஃப் அல்லது லைட் ஜாக்கெட் எடுத்துச் செல்லவும்.
  • தொப்பி, கண்ணாடி, குடை, மற்றும் முகக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரடி வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • தாகம் ஏற்படவில்லை என்றாலும், சிறுசிறு இடைவெளிகளில் தண்ணீர் குடியுங்கள். மோர், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை திரவங்களைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஏசியின் வெப்ப நிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் இடையில் வைத்திருங்கள். இந்த அளவு வெப்பநிலை உடலுக்கு சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஏசியில் மிகக் குறைந்த அளவு வெப்பநிலையை வைத்திருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
  • மாம்பழம், பயறு வகைகள், கடலை, பாதாம், மற்றும் விதைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்கவும். தினமும் சிறிது நடைபயிற்சி செய்யவும்.
  • தலைவலி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.
  • குளிர்ந்த காற்று மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதற்கான தீர்வாக, தினமும் சுலபமான ‘பிராணாயாமா’ அல்லது டீப் பிரீதிங் பயிற்சிகள் உதவக்கூடும்.
  • ஏசியிலிருந்து நேரடியாக வெளிக்குச் செல்ல வேண்டாம். கொஞ்சம் நேரம் AC-யில்லாத இடத்தில் இருந்து பிறகு வெளியே செல்லுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)