பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!

Music Director Sam CS: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் பிரபல இசையமைப்பாளர் சாம். சி.எஸ். இந்த நிலையில் இவர் மீது தற்போது படத்திற்கு இசையமைப்பதாக கூறி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது பண மோசடி புகார்!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

Updated On: 

21 May 2025 21:05 PM

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சாம் சி.எஸ் (Sam C.S). இவர் மீது இன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பண மோசடி புகார் அளித்துள்ளார். அதில் தனது படத்திற்கு இசையமைப்பாதக கூறி பணம் வாங்கிக்கொண்டு பல ஆண்டுகள் ஆகியும் இசையமைக்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். சுமார் ரூபாய் 25 லட்சம் பணத்தை தன்னிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஆனால் படத்திற்கு இசையமைத்து கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் சமீர் அலிகான் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஏமாற்றிவரும் சாம் சி.எஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அதில் கடந்த 2020-ம் ஆண்டு தயாரிப்பாளர் சலீம் அலிகான் என்பவர் தன்னை நேரில் சந்தித்து தான் தயாரிக்க உள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற தமிழ்ப் படத்திற்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து இத்தனை வருடங்களாக சலீம் அலிகான் என்னிடம் எந்த தொடர்பில்லாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென என்னை சந்தித்த அவர் தான் முழுப் படத்தையும் எடுத்து முடித்து விட்டதாக என்னிடம் வாய் வார்த்தையாக சொல்லி படத்திற்கு இசையமைக்கச் சொல்லி கேட்டார் என்று சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்பு இசையமைத்து தருவதாக ஒப்புக்கொண்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துத் தரும் பணிகள் இருப்பதால் இந்தப் படத்திற்கு காலதாமதம் ஆகும் என்ற விவரத்தை சலீம் அலிகானிடம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விளக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை எல்லாம் கேட்டுக்கொண்டுவிட்டு தற்போது புகார் அளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் எக்ஸ் தள பதிவு:

இசையமைப்பாளர் சாம். சி.எஸ் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஹரி ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஓர் இரவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் சாம். சி.எஸ். இவர் இதனைத் தொடர்ந்து இசையமைத்த விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், கைதி, எனிமி, ராக்கெட்ரி தி நம்பி, சைரன், பார்க்கிங், புஷ்பா 2 என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தற்போது வரை இருந்து வருகின்றது. இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் அதிகப் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.