அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் – இயக்குநர் யார் தெரியுமா? வெளியான அதிகார்பூர்வ அறிவிப்பு

Dhanush as Kalam : நடிகர் தனுஷ் தற்போது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஆதி புருஷ் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கவிருக்கிறார்.

அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா? வெளியான அதிகார்பூர்வ அறிவிப்பு

தனுஷ்

Updated On: 

22 May 2025 00:35 AM

நடிகர் தனுஷ் (Dhanush) தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் (Ilaiyaraaja) வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக பூஜையும் போடப்பட்டது. இந்த பூஜையில் கமல்ஹாசன் (Kamal Haasan) உட்பட கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்தப் படம் பொருளாதார சிக்கல் காரணமாக கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது புதிய பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 21, 2025 அன்று வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக மாறியது வரையிலான அவரது வாழக்கை பயணத்தை படமாக உருவாக்கப்படுகிறது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலான அக்னி சிறுகுகள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. அவரது அறிவியல் அறிவு, கவிதை, மனித நேயம், குடியரசுத் தலைவராக அவரது செயல்பாடுகள் வரை இந்தப் படத்தில் இடம்பெறவிருக்கிறது. இந்தப் படத்தில் அப்துல் கலாமாக தனுஷ் நடிக்கவிருக்கிறார்.  இந்தப் படத்தை ஆதி புருஷ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.  இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் கலாமாக தனுஷ்

 

நாகர்ஜுனாவுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள குபேரா படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதனையடுத்து ஹிந்தியில் தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் அடுத்ததாக வெளியாக காத்திருக்கிறது.

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் தனுஷ்

தனுஷ் – இயக்குநர் வெற்றிமாறன் காம்போவிற்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த அளவுக்கு தரமான படங்களை இருவரும் இணைந்து அளித்திருக்கின்றனர். அந்த வகையில் மீண்டும் இவர்கள் காம்போ இணையவிருக்கிறது. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.