பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்

Comedy Actor Goundamani: தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானக திகழ்ந்த நடிகர் கவுண்டமணியின் மனைவி இன்று  காலமானார். 67-வயதான நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு இன்று தேனாம்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது மனைவி சாந்தி

Published: 

05 May 2025 13:36 PM

கடந்த 1964-ம் ஆண்டு பழம்பெரும் நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையில் தோன்றினார் நடிகர் கவுண்டமனி (Actor Goundamani). அதனைத் தொடர்ந்து 1970-ம் ஆண்டு வெளியான ராமன் எத்தனை ராமனடி என்ற சிவாஜியின் படத்திலும் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்திலேயே நடித்தார். இந்த நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு நடிகர் சிவாஜியின் நடிப்பில் வெளியான தேனும் பாலும் படத்தில் சுப்ரமணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின்பு 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1977-ம் ஆண்டு கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தில் சுப்ரமணி என்ற பெயரில் மீண்டும் நடித்தார். இந்த நிலையில் 16 வயதினிலே படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், சுவரில்லாத சித்திரங்கள் என்று தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடந்து நடிக்கத் தொடங்கினார் நடிகர் கவுண்டமணி.

இதனைத் தொடர்ந்து 1980-களில் இருந்து தொடர்ந்து 2010 ஆண்டுகள் வரை சுமார் 30 ஆண்டுகளாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார் நடிகர் கவுண்டமணி. காமெடியில் இவரும் செந்திலும் இணைந்து நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியை சம்பாதித்தது.

நடிகர்கள் கவுண்டமணி – செந்தில் கூட்டணி எப்படி ரசிகர்களிடம் ஹிட் அடித்ததோ அதே போல நடிகர்கள் சத்யராஜ் – கவுண்டமணி கூட்டணி மற்றும் நடிகர்கள் மணிவண்ணன் – கவுண்டமணி கூட்டணியையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி மட்டும் இன்றி வில்லன், குணசித்திர கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்தார் நடிகர் கவுண்டமணி.

நக்கல் நையாண்டிக்கு பெயர் போன நடிகர் கவுண்டமணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்தப் படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் எழுதி இயக்கி இருந்தார்.

இந்தப் படம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அரசியல் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் கவுண்டமணி உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, சாய் தன்யா, சதீஷ் மோகன், ராஜேந்திரன், சந்தான பாரதி, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியான செய்தியின் படி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 1963-ம் ஆண்டு சாந்தி என்பவரை நடிகர் கவுண்டமணி திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாந்தி இன்று உயிரிழந்த நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.