விஜய் பட காமெடி நடிகர் இறந்துவிட்டதாக வைரலான செய்தி… அவரே வெளியிட்ட வீடியோ
Actor Benjamin: நடிகர் விஜயின் திருப்பாச்சி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நன்கு கவனம் பெற்றவர் காமெடி நடிகர் பெஞ்சமின். இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இது முதல் முறை அல்ல 4-வது முறை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் பெஞ்சமின்
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் பெஞ்சமின் (Actor Benjamin) தான் உயிரிழந்துவிட்டதாக 4-வது முறையாக வதந்தி பரவி வரும் நிலையில் அதுகுறித்து அவர் தற்போது பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் 2000-ம் ஆண்டு இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெளியான படம் வெற்றிக் கொடி கட்டு. இந்தப் படத்தில் நடிகர்கள் முரளி மற்றும் பார்த்திபன் இருவரும் நாயகன்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மீனா, மனோரமா, வடிவேலு, ஆனந்த் ராஜ், விஜயகுமார், மாளவிகா, சார்லி, பெஞ்சமின் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக பெஞ்சமின் அறிமுகம் ஆனார். அதில் வடிவேலுவின் மச்சானாக ஒரே ஒரு ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தைப் பெறும் சீனில் நடித்திருந்தார் நடிகர் பெஞ்சமின்.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி, ரன், பகவதி, காதல் அழிவதில்லை, அன்பே சிவம், காதல் சடுகுடு, சாமி, தென்னவன், ஆட்டோகிராஃப், அருள், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தேவதையை கண்டேன், திருப்பாச்சி, ஐயா, திருபதி, வீராசாமி, மாமதுரை, மச்சக்காரன், மாஞ்சா வேலு, நாடோடிகள் 2 என பல ஹிட் படங்களில் நடித்தார் பெஞ்சமின்.
குறிப்பாக வெற்றிக் கொடிகட்டு காமெடி மற்றும் விஜயின் நடிப்பில் வெளியான பகவதி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்த காமெடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பகவதி படத்தில் வடிவேலுவின் நண்பராக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் பெஞ்சமின்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, நான் இறந்துவிட்டதாக சிலர் செய்திகளை வெளியிட்டுள்ளனர். மேலும் எனது வீட்டிற்கு சென்று எனது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட பலரிடம் சென்று நான் உயிரிழந்துவிட்டதாக பேசியுள்ளனர்.
இந்த மாதிரி நான் உயிரிழந்துவிட்டேன் என்று செய்தி பரவுவது முதல் முறை அல்ல. இது நான்காவது முறையாக பரவுகிறது. திருப்பாச்சி நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது மிகவும் மன வேதனையை அளிக்கிறது என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் பெஞ்சமின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது சொந்த ஊரான சேலத்திற்கு சென்று தனது குடும்பத்தினரிடமே நான் இறந்துவிட்டதாக கேட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.