Ukraine War Ceasefire : உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் – புதினின் 2 மணி நேர பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
Trump and Putin Talks 2 Hour Call : அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையேயான 2 மணி நேர தொலைபேசி உரையாடல் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது. போர்நிறுத்தம் குறித்து இரு தரப்பும் ஆலோசித்ததாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்

உக்ரைன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் 2025, மே 19ம் தேதி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் கலந்துரையாடினர். இந்த உரையாடல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பானது மட்டுமே. 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக, அவர் ஜனாதிபதியான சில நாட்களுக்குள் போரை நிறுத்துவதாக தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தார். இருப்பினும், போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, அதைத் தடுக்க டிரம்ப் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், புடினுடனான தனது உரையாடலை பாசிட்டிவாகவே கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘அவர்கள், போர் நிறுத்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கான நிபந்தனைகள் எதுவாக இருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அவை முடிவு செய்யப்படும் என்றார்.
புதினின் அணுகுமுறை ஏன் மாறியது?
இந்த 2 மணி நேர உரையாடலுக்குப் பிறகு, நேரடிப் பேச்சுவார்த்தைகளின் செயல்முறையைப் பார்க்கும்போது, நாம் சரியான திசையில் நகர்கிறோம் என்று கூறலாம் என புதின் கூறினார். மேலும், சரியான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சிறிது காலத்திற்கு போர்நிறுத்தம் சாத்தியமாகும் என்றார். போர்நிறுத்தம் குறித்த புதினின் அணுகுமுறை மாறிவிட்டதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், சமீபத்தில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யா மீது விதித்த புதிய தடைகள் என்று நம்பப்படுகிறது.
மறுபுறம், போர்நிறுத்தத்திற்கான புதினின் நோக்கங்கள் குறித்து ஜெலென்ஸ்கி சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். ஆனால் ரஷ்யா இதற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் சொன்ன விஷயம் என்ன?
ட்ரம்ப் – புடினுடனான உரையாடலுக்குப் பிறகு டிரம்ப் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டார். அதில் இந்த போர் முடிந்த பிறகு அமெரிக்காவுடன் உயர் மட்ட வர்த்தகத்தை ரஷ்யா செய்ய விரும்புகிறது என்றும், இதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு வணிக வளர்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாகும். அதன் ஆற்றல் வரம்பற்றது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றார்.
ட்ரம்பும் புதினும் 3 முறை பேசினார்கள்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே நடந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக தெரிந்தது. இருப்பினும், இது தொடர்பாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை முயற்சி எடுத்துள்ளார், இதற்காக புதினும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை, போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்புக்கும் புதினுக்கும் இடையே மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முதல் கலந்துரையாடல் பிப்ரவரியிலும், இரண்டாவது கலந்துரையாடல் மார்ச் மாதத்திலும், மூன்றாவது கலந்துரையாடல் மே மாதத்திலும் நடைபெற்றது, இதுவே மிக நீண்ட காலமாகும்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்றும், 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், டிரம்பின் இந்தப் பேச்சுக்களும் முயற்சிகளும் எந்த அளவுக்கு வெற்றியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.