Tamil Nadu Class 12th Supplementary Exam : 12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது?.. அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
12th Supplementary Exams from June 26, 2025 | 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், துணை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 08 : தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் (12th Board Exam Result) வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு (Supplementary Exam) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியடைந்துள்ள மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெரும் வகையில், ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு துணை தேர்வு குறித்து அமைச்சர் அறிவித்துள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (மே 08, 2025) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் சுமார் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 7,92,494 மாணவர்களில் 7 ,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 3,47,670, மற்றும் மாணவிகள் 4,05,472 தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை வித இந்த ஆண்டு 0.47 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
12 ஆம் வகுப்புக்கு துணை தேர்வு எப்போது – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
2024-2025 கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு(+2) பொதுத்தேர்வினை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளையும் இன்று வெளியிட்டுள்ளோம்.
இந்தியாவிலேயே அதிகமான தேர்ச்சி விகிதம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதில் பெருமை கொள்கிறோம். துல்லியமான திட்டமிடலின் காரணமாக நேர்மையான முறையில்…
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 8, 2025
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08, 2025) காலை 9 மணிக்கு வெளியான நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜூன் 26, 2025 முதல் துணை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். துணை தேர்விற்கு மே 13, 2025 முதல் மே 31, 2025 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மே 12 முதல் மதிப்பெண் பட்டியலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மே 12, 2025 முதல் மதிப்பெண் பட்டியலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவச் செல்வங்கள் தங்களது விடைத்தாள் நகலினைப் பெறுவதற்கு மே 13, 2025 முதல் மே 17, 2025 வரை தங்கள் பள்ளிகளின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.