Southern Railway: மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு…
Southern Railway's Special Train:தெற்கு ரயில்வே, 2025 மே 10 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கும், மே 12 அன்று மதுரையிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயிலை இயக்குகிறது. கோடை விடுமுறை காரணமாக அதிகரித்துள்ள பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

சென்னை – மதுரை சிறப்பு ரயில்
சென்னை மே 09: சென்னையில் இருந்து மதுரைக்கு (Chennai – Madurai) 2025 மே 10 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், 2025 மே 12 அன்று மதுரையிலிருந்து தாம்பரத்திற்கு திரும்பும் பயணம் நடைபெறும் என்றும் தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. ரயிலில் இரண்டு ஏசி, 16 ஸ்லீப்பர் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி வழியாக ரயில் பயணிக்கும். கோடை விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்து கட்டண உயர்வு காரணமாக ரயில் பயணத்தைத் தேர்வுசெய்யும் மக்கள் முன்பதிவில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிறப்பு ரயில் அறிவிப்பு பயணிகளுக்கு நிவாரணமாகியுள்ளது.
சென்னை – மதுரை சிறப்பு ரயில்
கோடை விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் பயணிக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தெற்கு ரயில்வே ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை (2025 மே 10, சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரையை எட்டும். அதேபோல, திரும்பும் பயணமாக 2025 மே 12ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை சந்திப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.
கோடை விடுமுறையால் பயணிகள் அதிகரிப்பு
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். உறவினர் வீட்டு நிகழ்வுகள், கோவில் விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் நோக்கில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் பெருகி வருகிறார்கள்.
பேருந்து கட்டணத்தில் உயர்வு; ரயில்களில் முன்பதிவுக்கு அவசர நிலை
இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகளில் குறிப்பாக ஏசி வசதியுள்ள பேருந்துகளில் ₹1000க்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ரயில்களில் முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்ட நிலையில், கடைசி நேரத்தில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் தட்கல் முறையில் முயற்சி செய்தாலும் கூட, சில நொடிகளில் டிக்கெட் முடிந்து விடுகிறது. இதனால், குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கியது – வழித்தட விவரம்
பயணத் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இது செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் கொடை ரோடு வழியாக பயணிக்கும். திருச்சியில் 10 நிமிடங்கள் மற்றும் திண்டுக்கலில் 5 நிமிடங்கள் நிற்கும்.
இந்த ரயிலில் இரண்டு ஏசி பெட்டிகள், 16 ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த சிறப்பு ரயில் அறிவிப்பால், கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்ட பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக உள்ளது.