முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
Southwest Monsoon Preparation Meeting | தமிழகத்தில் வழக்கத்தை விட முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 19, 2025) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 19 : தென்மேற்கு பருவமழை (South West Monsoon) முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று (மே 19, 2025) ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2025-ல் வழக்கத்தை விட முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், மழையின் தீவிரம் உள்ளிட்டவற்றை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்கூட்டியே தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, கேரளாவில் மே 20, 2025 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 19, 2025) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், 2025-ல் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் தமிழகத்தில் வழகத்தை விட அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 19, 2025) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.