ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து… 4 பேர் பலி.. திருவாரூரில் சோகம்!
Tiruvarrur Accident : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆம்னி வேணும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

திருவாரூர் விபத்து
திருவாரூர், மே 03 : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து (Thiruvarur accident) ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்லும் ஆம்னி மினி பேருந்து ஒன்று சென்றிருக்கிறார். அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அப்போது, எதிர் திசையில் அரசுப் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்ல இருந்தனர்.
இந்த நிலையில் தான், 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, உயிரிழந்த 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து எதனால் வந்தது என்று தெரியவில்லை. எனவே, விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் சோகம்
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். ஓட்டுநர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற விபத்துகள் நடந்து வருகிறது. மேலும், சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதாலும் விபத்து அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் 67,213 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 67,183 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டு சாலை விபத்துகள் சிறியளவு குறைந்துள்ளதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. 2023ஆம் ஆண்டில் 17,526 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 17,282 ஆகக் குறைந்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 6,160 சாலை விபத்து அபாய இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் நடந்த 17,526 விபத்துகளில் 16,800 விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தவறுதான் காரணம் என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு மொத்தம் சாலை விதிகளை மீறியதற்காக 12.58 லட்சம் பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதகா தகவல் வெளியாகி இருக்கிறது. மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக 3.49 லட்சம் நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.