பைக் திருட்டு என புகார்.. இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்த காவலர்!
திருவள்ளூரில் பைக் திருட்டு புகாரில், காவலர் ஹரிதாஸ் லஞ்சம் கேட்டு, பின்னர் தவறான நோக்கத்துடன் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. புகார் அளித்த பெண்ணின் சகோதரன் சரியான நேரத்திற்கு அங்கு வந்ததால் கையும் களவுமாக பிடிபட்ட ஹரிதாஸ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவடி காவலர் கைது
ஆவடி, மே 9: திருவள்ளூரில் (Tiruvallur) பைக் காணவில்லை என புகார் செய்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்த காவல்துறையைச் சேர்ந்த நபர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் காவல்துறையை நாடுவது வழக்கம். ஆனால் அந்த துறையில் இருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறு மற்ற நன்மதிப்பு கொண்ட அதிகாரிகளுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. லஞ்சம் பெறுவது, முரட்டுத்தனமாக தாக்குவது தொடங்கி போன்ற பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இப்படியான நிலையில் திருவள்ளூரில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைக்கும் அமைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை எடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் தனது கணவரின் பைக் திருடு போனதாக கூறி ஆவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் திருப்பத்துறை சேர்ந்த ஹரிதாஸ் என்ற காவலரும் விசாரணை நடத்தி உள்ளார். இதற்கிடையில் ஆவடி பகுதியில் திருடு போன பைக் மீட்கப்பட்டு அந்த பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அதிர வைத்த காவலர்
அடுத்த சில நாட்களில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட காவல் அதிகாரி ஹரி தாஸ் திருடு போன உங்கள் பைக்கை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து கொடுத்திருக்கிறோம். அதனால் ஏதாவது பார்த்து கவனியுங்கள் என தெரிவித்துள்ளார். சரி பணம் கேட்கிறார் என அந்த பெண்ணும் நினைத்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
முதலில் ரூபாய் 15,000 லஞ்சம் கேட்ட ஹரிதாஸ் அப்பெண்ணிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிந்ததும், ஹோட்டல் ரூமுக்கு வருமாறு தனிமையில் நேரம் செலவிட வேண்டும் எனவும் அழைத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் அப்படிப்பட்ட நபர் இல்லை என்றும், இப்படியெல்லாம் பேசுவது பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஹரிதாஸ் வற்புறுத்தவே அந்த பெண் உடனடியாக தனது சகோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுத்த காவல்துறை
ஹரிதாஸிடம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் நேராக அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணின் சகோதரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஹரி தாஸை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திணறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஹரி தாஸை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அந்தப் பெண்ணை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை என தெரிய வந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் ஹரிதாஸ் தற்போது பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் விசாரணை என்ற பெயரால் காவல் நிலையங்களில் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் அவ்வாறு பணி செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.