சென்னை சாந்தோம், லூப் சாலையில் முக்கிய போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

Santhome and Loop Road Resume Two Way Traffic | சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சாந்தோம் மற்றும் லூப் சாலையில் நீடித்து வந்த சிக்கல் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை சாந்தோம், லூப் சாலையில் முக்கிய போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Published: 

09 May 2025 08:21 AM

சென்னை, மே 09 : சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை (Santhome Highway) மற்றும் லூப் சாலையில் (Loop Road) மீண்டும் இரு வழி போக்குவரத்து நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மெட்ரோ பணிகள் காரணமாக இந்த சாலைகள் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு பகுதியில் மெட்ரோ பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஒரு வழி பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று (மே 09, 2025) முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மெட்ரோ பணிகள் காரணமாக ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்ட சாலைகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்துகள் ஏற்படாத வகையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சாந்தோம், லூப் சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்ததன் காரணமாக அங்கு போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கார்ணீஸ்வரர் கோவில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக ஒரு வழிப்போக்குவரத்து 2024-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ பணிகள் முடிந்த நிலையில், நெரிசல் இல்லாத நேரங்களில் இன்று ( மே 09, 2025) முதல் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லுப் சாலையில் மீண்டும் இருவழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்ன தெரிவித்துள்ளது.

அதன்படி நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒரு வழி போக்குவரத்த வழக்கம்போல் தொடரும் என்றும் மற்ற நேரங்களில் இரு வழி போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.