கோயில் திருவிழாவில் நடனமாடுவதில் வந்த தகராறு.. 17 வயது சிறுவன் குத்தி கொலை!
17-Year-Old Boy Killed in Dance Issue | கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோயில் திருவிழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 17 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
கரூர், மே 05 : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் விழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சிறுவனை கொலை செய்த குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயில் திருவிழா கலவரத்தில் சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு – 17 வயது சிறுவன் குத்தி படுகொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடியுள்ளனர். அப்போது, அங்கு நடனமாடிக்கொண்டிருந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது சிறுவன் மீது நாகேந்திரன் என்பவர் வந்து விழுந்துள்ளார். அப்போது ஷியாம் சுந்தர், நாகேந்திரனிடம் ஓரமாக சென்று நடனமாடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஷியாம் சுந்தரை குத்தி கொலை செய்துள்ளார்.
கொலையில் முடிந்த தகராறு
இதனை கண்டு தடுக்க சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் மீது நாகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் ஷியாம் சுந்தர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயில் திருவிழாவில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
2 தணிப்படைகளை அமைத்து தேடும் போலீஸ்
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்த நாகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் விழாவில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.