PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!

Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025ன் 37வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலியின் 73 ரன்கள் மற்றும் தேவதத் படிக்கலின் 61 ரன்கள் பெங்களூரு வெற்றிக்கு முக்கிய காரணம். க்ருணால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி - படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ்

Published: 

20 Apr 2025 19:13 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 37வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33 ரன்களும், ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தனர். மேலும், பிரியன்ஸ் ஆர்யா 22 ரன்களும், மார்கோ ஜான்சன் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணியில் க்ருணால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

158 ரன்கள் இலக்கு:

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை பஞ்சாராக்கினர் என்றே சொல்லலாம்.

பெங்களூரு வெற்றி:

ஒரு முனையில் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவ்வபோது தேவையான பவுண்டரிகளை விரட்டிகொண்டிருந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சிக்ஸர்களை நொறுக்கினர். கோலிக்கு பிறகு களமிறங்கினாலும், படிக்கல் வெறும் 30 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து, பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்தபோது படிக்கல் 35 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 61 ரன்கள் எடுத்து ப்ரார் பந்தில் வதேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

விராட் கோலி அரைசதம்:

உள்ளே வந்த ரஜத் படிதாரும் 12 ரன்கள் எடுத்து வெளியேற, அதற்கு ஐபிஎல் 2025ல் விராட் கோலி தனது மற்றொரு அரைசதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடி விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, ஜிதேஷ் சர்மா 11 ரன்களில் துணை நின்றார். இதன் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.