India vs England Test Series 2025: டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடம் இனி யாருக்கு..? ஓர் அலசல்..!
Virat Kohli Replacement: விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுக்குப் பின், இந்திய அணியின் 4வது இடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கருண் நாயர், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அனுபவமும், முதல் தர போட்டிகளில் 8211 ரன்கள் மற்றும் 23 சதங்கள் என சிறப்பான சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விராட் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 4வது இடம் என்பது சிறப்பு வாய்ந்த இடமாகும். இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்த இடத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். முன்னதாக, இந்திய டெஸ்ட் அணிக்காக 4வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு, அந்த இடத்தை விராட் கோலி (Virat Kohli) ஏற்றுக்கொண்டு, கிட்டதட்ட 12 ஆண்டுகள் இந்திய அணியின் சுமையை தாங்கினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக யாரும் எதிர்பார்க்காதவகையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில் இந்த இடத்தை நிரப்ப முயற்சி செய்தாலும், அவருக்கு போதிய அனுபவம் இல்லை. இதனால், முதல் தரப்போட்டியில் 23 சதங்களுடன் 8,211 ரன்கள் எடுத்துள்ள இத்தகைய வீரரை இந்திய அணி முயற்சி செய்யலாம். மேலும், இவருக்கு இங்கிலாந்து நாட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு. யார் அந்த வீரர் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
கருண் நாயர்:
கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் நார்தாம்ப்டன்ஷையருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு. அங்கு கடந்த 2024ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். அந்த போட்டியில், நார்தாம்ப்டன்ஷையருக்காக கருண் நாயர் 253 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார்.
ரஞ்சி டிராபில் அசத்தல்:
2024 -25 ரஞ்சி டிராபி சீசனில் விதர்பா அணி சாம்பியன் பட்டம் வெல்ல கருண் நாயர் முக்கிய பங்கு வகித்தார். ரஞ்சி டிராபியில் 16 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உள்பட 53.93 சராசரியில் 863 ரன்கள் எடுத்தார். அதேபோல், 2024-25 விஜய் ஹசாரே டிராபியில் 8 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் மற்றும் 1 அரைசதத்துடன் 779 ரன்கள் எடுத்தார். இது மட்டுமல்லாமல், 2024-25 உள்நாட்டு டி20 போட்டியான சையத் முஷ்டாக் அலி டிராபியில் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் இருந்தார். அந்த சீசனில் கருண் நாயர் 6 இன்னிங்ஸ்களில் 42.50 சராசரியாகவும் 177.08 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 255 ரன்களை எடுத்தார். ஒட்டுமொத்தமாக, கருண் நாயர் 114 முதல் தர போட்டிகளில் 23 சதங்கள் மற்றும் 36 அரைசதங்கள் உதவியுடன் 8211 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு அறிமுகம்:
கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் அறிமுகமானார். தனது மூன்றாவது டெஸ்டில் முச்சதம் அடித்து வரலாறு படைத்தார். தனது கடைசிப் போட்டியை இந்தியாவுக்காக 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடினார். இருப்பினும், 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, கருண் நாயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்படி, இந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணியில் கருண் நாயர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.