GT vs CSK: கடைசி போட்டியில் சீறிய சென்னை… சிதைந்த குஜராத் அணியின் முதல் இடத்தின் கனவு!

Chennai Super Kings: ஐபிஎல் 2025ன் 67வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 230 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே, கான்வே, பிரெவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். குஜராத் அணி 147 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 சீசனை முடித்தது.

GT vs CSK: கடைசி போட்டியில் சீறிய சென்னை... சிதைந்த குஜராத் அணியின் முதல் இடத்தின் கனவு!

எம்.எஸ்.தோனி

Published: 

25 May 2025 20:46 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 67வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 சீசனையும் முடித்தது. இந்த வெற்றி சென்னை அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தை தக்க வைக்கும் வாய்ப்பு பறிபோனது.

230 ரன்கள் குவித்த சிஎஸ்கே:

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே மற்றும் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆயுஷ் மத்ரே 17 பந்துகளில் 34 ரன்களும், கான்வே 35 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து உள்ளே வந்த உர்வில் படேல் 19 பந்துகளில் 35 ரன்கலும், டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக பேட்டிங் செய்து 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்தினர். அதேநேரத்தில் ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, சிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி ஜிடி அணிக்கு 231 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

231 ரன்கள் இலக்கு:

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் மூன்றாவது ஓவரிலேயே 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, குஜராத் அணி 4வது மற்றும் 5வது ஓவர்களில் தலா 1 விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு, சாய் சுதர்சனும் ஷாருக்கானும் தாக்குபிடித்து 85 ரன்கள் எடுத்து சென்றபோது, ரவீந்திர ஜடேஜா இவர்கள் இரண்டையும் வெளியேற்றினார். இதன் பிறகு, குஜராத் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. இறுதியாக 18.3 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அகமது தலா 3 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்கள்.