14 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மகா கும்பாபிஷேக விழா.. விழாக்கோலம் பூண்ட திருப்பரங்குன்றம்..

Thiruparankundram: திருப்பரங்குன்றம் திருக்கோயில் ஜூலை 14, 2025 தேதியான நாளை குடமுழுக்கு விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மகா கும்பாபிஷேக விழா.. விழாக்கோலம் பூண்ட திருப்பரங்குன்றம்..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Jul 2025 09:14 AM

திருப்பரங்குன்றம், ஜூலை 13, 2025: முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஜூலை 14 2025 அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக சுமார் ரூ. 2.44 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயில் வளாகங்கள் புனரமைக்கப்பட்டு குறிப்பாக உபயதாரர் மூலம் ரூபாய் 70 லட்சத்தில் 125 அடி உயரமுள்ள ஏழு நிலை ராஜகோபுரத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி ஜூலை 11 2025 அன்று முதல் யாகசாலைகளில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனி சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம்:

அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் தனி சிறப்பு பெற்றது. இந்த கோயிலில் முருகப்பெருமானுடன் தெய்வானை மட்டுமே அமர்ந்திருப்பார் உடன் வள்ளி இருக்க மாட்டார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 150 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் 85 ஓதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணங்கள் நடந்து வருகிறது.

Also Read: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. ஜொலிக்கும் ஆலயம்!

திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா என்பது சரியாக நாளை அதாவது ஜூலை 14 2025 அன்று காலை 5:25 மணி முதல் 6:10 மணிக்குள் நடக்கவுள்ளது. கும்பாபிஷேக விழா நிறைவடைந்த பிறகு 10 ட்ரோன்கள் மூலம் அங்கு இருக்கக்கூடிய மக்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவின் போது ராஜகோபுரத்தின் ஏழு கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜைகள் செய்து, தீபாரதனை மேற்கொள்ளப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசானம் செய்ய தடை:

முக்கியமாக இந்த திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருக்கக்கூடிய மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளுகிறார்கள். இதன் காரணமாக ஜூலை 13 2025 தேதியான இன்று மாலை 6:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Also Read: செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்.. உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

ஜூலை 14 2025 தேதியான நாளை திருப்பரங்குன்றத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு முடித்த பின்பு இரவு 10 மணிக்கு மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் மீண்டும் புறப்பாடாகி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைவார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

திருப்பரங்குன்றம் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள், ஆங்காங்கே காவல் பூத் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரையில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு வரக்கூடிய பக்தர்கள் உடல்நிலை கருதி ஆங்காங்கே மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 14 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றமே விழாக்கோலம் பூண்டுள்ளது