45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கொங்கு சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோட்டை பெரிய மாரியம்மன் என்றும் அழைக்கப்படும் இந்த அம்மன், 24 நாடுகளையும் காத்த தெய்வமாக போற்றப்படுகிறாள்.

45 வெள்ளிக்கிழமை சென்றால் பலன்.. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்!

ஈரோடு பெரிய மாரியம்மன்

Published: 

13 May 2025 12:41 PM

பொதுவாக இந்து மத தெய்வங்களில் மாரியம்மனுக்கு (Goddess Mariamman) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தென் தமிழ்நாட்டில் அதிகம் வணங்கக்கூடிய பெண் தெய்வங்களில் முதன்மையானவர் மாரியம்மன் தான். மாரி என்றால் மழை. வெயில் காலத்தில் வெட்கை நோய்கள் தம்மை அண்டாமல் தடுப்பதற்காக மழை பெய்து பூமியை குளிர்ச்சி அடைய மக்கள் வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கு மனமிறங்கிய பராசக்தி மழையை பொழிந்தாள் அப்படியாக இந்த அம்மனுக்கு மாரியம்மன் என பெயர் வந்தது. வேப்ப மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இந்த அம்மன் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் இந்த பெரிய மாரியம்மன் கோயில் (Periya Mariamman temple) பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கோயிலானது ஈரோட்டின் மாநகர பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கோட்டை இருந்த காலகட்டத்தில் ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் இருந்த 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக இருந்த பெரிய மாரியம்மன் பக்தர்களால் கோட்டை பெரிய மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். இந்த கோயில் சரியாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் எதிரே பிரப் ரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைந்துள்ளது.

எந்நேரமும் பக்தர்கள் கூட்டம்

கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தினமும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் எந்நேரமும் இங்கு கூட்டம் களைகட்டும்.

கோயிலின் வரலாறு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகவலின் படி, ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் வாய்க்கால் மாரியம்மன் என மூன்று மாரியம்மன் திருக்கோயில்கள் இருக்கிறது. இதில் பெரிய மாரியம்மன் கோயில் வடக்கு திசை நோக்கியும் மற்ற இரண்டு மாரியம்மன் கோயில் கிழக்கு பக்கம் நோக்கியும் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் உள்ளதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலானது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

பெரிய மாரியம்மன் கோயிலின் கட்டிடக்கலை முதன்முதலாக பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் முன் பகுதியில் சிங்க வாகனமும் தலவிருட்சமான வேப்ப மரமும் இருப்பது மிகவும் சிறப்பாகும். இங்கு பரசுராமருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. பூச்சாற்றுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை மேலே குறிப்பிடப்பட்ட மூன்று மாரியம்மன் கோயில்களில் விழாவானது இணைந்தே நடந்து வருகிறது.

இந்த கோயில் திருவிழாவில் சாதி மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும் பொங்கலிடுவது தொடங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், பெண்களும் மாறுவேடம் அணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள்.

பெரிய மாரியம்மன் வேண்டும் வரம் தருபவர் என பக்தர்களால் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தை பேறு வேண்டி வணங்குபவர்கள் 45 வெள்ளிக்கிழமை தொடர்ந்து கோயிலுக்கு வந்து வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அம்மை நோய் வராமலும் அப்படி வந்தவர்களுக்கு விரைந்து சுகம் அளிக்கக்கூடியதாகவும் மாரியம்மன் அருள் பாலிக்கிறார் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் இருக்கும் தேரில் சிவபெருமான் மற்றும் முருகனின் திருவிளையாடல் காட்சிகளை காணலாம் அதே போல் தேரில் நான்கு முனைகளிலும் நான்கு யானைகள் தாங்குவது போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை நேரில் சென்று வாருங்கள்.

(கோயில் பற்றி உலாவும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)