முருகனின் முழு அருளைப் பெற வேண்டுமா? – இந்த 3 விஷயத்தை பண்ணுங்க!

முருகப்பெருமானின் அருளை எளிதில் பெற உதவும் மூன்று சக்திவாய்ந்த திருநாமங்களை உச்சரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "முருகன்," "குமரன்," மற்றும் "குகன்" என்ற நாமங்களின் பின்னனியில் இருக்கும் ஆழமான பொருள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நாமங்களை உச்சரிப்பதன் மூலம் மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி, இறைவனின் அருள் பெருகும் எனக் கூறப்படுகிறது.

முருகனின் முழு அருளைப் பெற வேண்டுமா? - இந்த 3 விஷயத்தை பண்ணுங்க!

கடவுள் முருகன்

Published: 

15 May 2025 12:32 PM

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு (Lord Murugan) உலகம் எங்கும் பல்வேறு வகையிலான வழிபாட்டுத்தலங்கள் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முருகனுக்கு அறுபடைவீடுகள் அமைந்துள்ளது. சமீப காலமாக முருகப்பெருமானை நினைத்து மனமுருக வேண்டி அவனிடம் சரணடையும் பக்தர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஒருமுறை அருணகிரி நாதரிடம் (Arunagiri Nathar) முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள் உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பல கோடி நாமம் படைத்தவர் முருகன் என அவர் பதிலளிக்கிறார். அத்தகைய பல கோடி நாமங்களில் எதை சொன்னால் முருகனின் அருளை எளிதாக பெறலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். எனவே அருணகிரிநாதரிடம் மீண்டும் பக்தர்களுக்கு புரியும் படியான நாமத்தை பற்றி சொல்லுங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன நாமங்களில் மூன்றைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இதனை ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தனது யூட்யூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் சொல்ல வேண்டியது.

“முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே”

இதன்மூலம் முருகனின் நாமங்களைச் சொல்லி உருகுதல் வேண்டும் என்பது அடிப்படை தத்துவமாகும். முருகனுக்குரிய திருநாமங்களில் மிகப்பழமையானது முருகு என்பது தான். வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய 3 இனங்களில் இருந்து உருவானது தான் தமிழ் என்ற வார்த்தை. அதேபோல் முருகு என்ற வார்த்தையும் 3 இனங்களில் இருந்து வந்தது தான். எனவே முருகு என யாரெல்லாம் உருகுகிறார்களோ, அவர்களுக்கு முருகனுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நாம் ஒவ்வொரு நொடியிலும் முருகா முருகா என சொல்லிக் கொண்டேயிருந்தால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகி துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. வாய் சொல்லாக இல்லாமல் மனமுருகி முருகனை அழைத்து உச்சரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாமம் முருகன் என்றால், அடுத்ததாக இரண்டவதாக உள்ள குமரன்  என உச்சரிக்க வேண்டும். எப்படியென்றால், குமாரன் என்பது மருவி குமரன் என்று மாறியது.

அதற்கு இளமையானவன் என்பது அர்த்தமாகும். கு என்றால் தேவையற்ற குப்பைகள் (கோபம், ஆசை, ஆணவம், பகை, பொறாமை) என்றும், மாரன் என்றால் அழிப்பவன் என்பதும் அர்த்தமாகும். திருமூலர், மனம் செம்மையானால் மந்திரமே தேவையில்லை என சொல்லியிருக்கிறார். அதன்படி மனதில் இருக்ககூடிய அழுக்குகள் எல்லாம் நீங்குகிறதோ, அப்போது இளமை நம்மை ஆட்கொள்ளும் என சொல்லப்படுகிறது. அடுத்தாக உள்ள குகன் என்றால் இதயக்குகையில் வாழ்பவன் என்பது அர்த்தமாகும்.

குமாரன் என உச்சரிக்கும்போது மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும். அந்த இதய குகையில் முருகப்பெருமான் குடிகொள்வதை தான் குகன் என அழைக்கிறோம். அவ்வாறு இருப்பவர்களை நாம் உயர்ந்த அடியார்களாக வணங்குவோம். முருகனிடம் சரணடையும் பக்தர்கள் வாழ்க்கையில் வரும் எதிர்மறை எண்ணங்கள் தொடங்கி துன்பங்கள் வரை அனைத்தும் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாகும்.

(ஆன்மிக அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)