விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி.. வீரர்களை சந்திப்பது சிறப்பான அனுபவம் என நெகிழ்ச்சி..
PM Modi Visits Adampur Airbase: பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது. இரு நாட்டுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின் இன்று பிரதமர் மோடி பஞ்சாபில் இருக்கும் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று வீரர்களை சந்தித்தார்,

ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை (மே 13,2025) பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்று அங்கிருக்க கூடிய வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காமில் ஏப்ரல் 22 2025 அன்று பட்டப் பகலில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலின் போது அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே இருக்கக்கூடிய பதட்டம் அதிகரித்து வந்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் இருக்கும் ஒன்பது பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து மே 9 மற்றும் 10ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ட்ரோன் மூலமும், ஏவுகணை மூலமும் தாக்க முயன்றது. அதில் ஆதம்பூர் விமானப்படை தளமும் ஒன்றாகும். ஜே எஃப் 17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆதம்பூர் விமானத்தளத்தில் உள்ள இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். ஆப்ரேஷன் சிந்துர் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பின் பிரதமர் மோடி ஆயுதப்படை வீரர்களை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆயுதப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி:
Earlier this morning, I went to AFS Adampur and met our brave air warriors and soldiers. It was a very special experience to be with those who epitomise courage, determination and fearlessness. India is eternally grateful to our armed forces for everything they do for our nation. pic.twitter.com/RYwfBfTrV2
— Narendra Modi (@narendramodi) May 13, 2025
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ”இன்று அதிகாலையில் நான் ஆதம்பூரில் இருக்கக்கூடிய விமான படைத்தளத்திற்கு சென்று நமது விமான வீரர்கள் மற்றும் வீரர்களை சந்தித்தேன். தைரியம் உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காக செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்
இதற்கிடையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நேற்று அதாவது மே 12 2025 இரவு 8:00 மணிக்கு மக்களிடையே பேசினார். இந்த உரையின் போது பிரதமர் மோடி பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்து பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். எல்லை தாண்டி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு புதிய பாதையை வரைந்து உள்ளது என்பதை வலியுறுத்தினார். இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலை அவர் நாட்டின் பெண்களுக்கு அற்பணித்தார். அதே நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியையும் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் உறுதியையும் பாராட்டிய மோடி ” ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்களை அடைவதில் நமது துணிச்சலான வீரர்கள் இணையற்ற வீரத்தை காட்டியுள்ளனர் இன்று நான் அவர்களின் துணிச்சலையும் அவர்களின் வீரத்தையும் நமது நாட்டின் ஒவ்வொரு தாய் சகோதரி மற்றும் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மோடி ” கடந்த சில நாட்களில் நாட்டின் திறன்களையும் சுயக்கட்டுப்பாட்டையும் நாம் கண்டோம். முதலில் ஒவ்வொரு குடிமகனின் சார்பாகவும் நமது ஆயுதப்படைகள் உளவுத்துறை மற்றும் நமது விஞ்ஞானிகளுக்கு நன்றியை செலுத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்/