ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை.. பிரபலங்கள் வரவேற்பு!

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை.. பிரபலங்கள் வரவேற்பு!

ஆபரேஷன் சிந்தூர்

Updated On: 

07 May 2025 13:09 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. 2025 மே 7ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடக்கும் நிலையில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் மீது இந்தியா திடீரென ஏவுகணை தாக்குதல நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளனர் அதனைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

ரஜினிகாந்த் 

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,  “ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் மோடியுடன் நிற்கிறது எனவும், ஒரு போராளியின் போர் தொடங்கிவிட்டது இலக்கை அடையும் வரை அது நிறுத்தப் போவதில்லை” எனவும் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி


அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், “பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தேன் நம் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு என்றும் துணை நிற்கும். நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்றும் உறுதியுடன் நிற்கும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி


மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “இந்திய ராணுவத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது.ஜெய்ஹிந்த்” என ஆபரேஷன் சிந்தூர் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. நமது ராணுவ படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கவும், பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே


பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து வெளிப்படும் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக இந்தியா ஒரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை நமது இந்திய ராணுவ படையினர் அழித்த நிகழ்வைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் மன உறுதியையும் தைரியத்தையும் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த நாளிலிருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்த ஒரு தீர்க்கமான நடவடிக்கைக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு துணை நிற்கும். தேசிய நலன் எப்போதும் மிகவும் உயர்ந்ததாகும் எனவும் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!” என இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.