மொபைல் ஆப் உருவாக்கியவர் முதல் யூடியூபர் வரை… இந்திய இராணுவ ரகசியங்களை பகிர்ந்த 10 பேர் கைது

India arrests 10 spies : பாகிஸ்தானுக்கு ரகசியங்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் இருந்து யூடியபர், கல்லூரி மாணவர், வியாபாரி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, பஹல்‌காம் தாக்குதலுக்குப் பின் உளவுத்துறையின் கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னணியில் நடைபெற்றுள்ளது.

மொபைல் ஆப் உருவாக்கியவர் முதல் யூடியூபர் வரை... இந்திய இராணுவ ரகசியங்களை பகிர்ந்த 10 பேர் கைது

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டவர்கள்

Updated On: 

19 May 2025 20:02 PM

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிவந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே மெல்ல அமைதி திரும்பி வரும் நிலையில் தற்போது மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவுத்தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஹல்‌கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உளவுத்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் வழங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்

பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் வழங்கியதாக கைது செய்யப்பட்ட 10 பேர் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யூடியூபர்  ஜோதி  மல்ஹோத்ரா

ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதாகும் ஜோதி மல்ஹோத்ரா ‘Travel with JO’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார் மற்றும் குறைந்தது இரு முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தான் உளவுத்துறை அவரை இந்தியாவில் தங்களது நம்பிக்கைக்குரிய நபராக மாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மாணவர் தவேந்திர சிங் தில்லோன்

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் பொலிட்டிகல் சையின்ஸ் படிக்கும் 25 வயதான தவேந்திர சிங் தில்லோன், ஹரியானா மாநிலத்தில் கடந்த மே 12, 2025 அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் கடந்த நவம்பர், 2025 மாதம் பாகிஸ்தானுக்கு சென்று வந்திருக்கிறார். மேலும் பட்டியாலா ராணுவ முகாம் தொடர்பான புகைப்படங்களை ஐஎஸ்ஐ-யுடன் பகிர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு பணியாளர் நவமான் இளாஹி

24 வயதான நவமான் இளாஹி, ஹரியானா பானிப்பட் பகுதியில் பாதுகாப்பு காவலராக வேலை பார்த்தவர். அவர் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார். இவரது மாமனாரின் வங்கி கணக்கில் பாகிஸ்தானிலிருந்து பணம் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 வியாபாரி ஷாஹ்ஜாத் வாஹப்

உத்தரபிரதேசம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஷாஹ்ஜாத் வாஹப், மொரதாபாத் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் பாகிஸ்தானுக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அவர் பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்ததுடன், ஆடைகள்,  மற்றும் சில பொருட்களை பாகிஸ்தானுக்கு கடத்தியதாக கூறப்படுகிறது.

இளைஞர் அர்மான்

ஹரியானா மாநிலம் நுஹ் பகுதியைச் சேர்ந்த  23 வயதான அர்மான் மே 16, 2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மொபைல் ஆப் உருவாக்கிய முர்தஸா அலி

குஜராத் காவல்துறையினர் ஜலந்தரில் நடத்திய ரெய்டில் கைது செய்யப்பட்ட முஹம்மது முர்தஸா அலி, பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு உளவுத்தகவல் பகிர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர் இதற்கென தனியாக ஒரு மொபைல் ஆப்பை உருவாக்கி தகவல்களை அனுப்பியுள்ளதாகவும், அவரிடமிருந்து நான்கு மொபைல் போன்கள் மற்றும் மூன்று சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகினர்.

கஜாலா மற்றும் யாமின் முகம்மது

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கஜாலா மற்றும் யாமின் முகம்மது ஆகிய இருவர் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு தகவல்களை அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சுக்ப்ரீத் மற்றும் கரன்பீர் சிங்

கடந்த மே 15, 2025 அன்று கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், பஞ்சாப்பை சேர்ந்த சுக்ப்ரீத் சிங் மற்றும் கரன்பீர் சிங் ஆகியோர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நகர்வுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கைதாகியுள்ளனர்.